Sunday, January 30, 2011

கவிதைக்கனல்


சூடு ஏறாத சொற்களால் கவிதை
..தொடுக்க எனக்குப் பிடிப்பதில்லை!
மாடுகள் கூட புல்இழுக் காமல்
..மந்தையில் சும்மா இருப்பதில்லை!

அப்போ திருந்த மக்கள் எல்லாம்
..அடிமைத் தனத்தால் குளிர்ந்திருந்தார்!
தப்பா வரிகளில் மாகவி பாரதி
..தணலை ஏற்றி உசுப்பிவிட்டார்!

பாரதி ஏற்றிய கவிதைக் கனலால்
..பாரத விடுதலை உறுதியாச்சு!
சாரதி உசுப்பிப் பெண்கள் எழுந்து
..சமத்துவ உரிமையும் கோரியாச்சு!

பாரதி தாசனின் புரட்சிச் சொற்களால்
..பாதி விதவையர்க்கு மணமாச்சு!
கூர்மைக் கனலில் சாதிப் பிரச்னை
..குனிந்தே வெந்து அமைதியாச்சு!

அன்றைய ஆட்சியர் கவிதைக் கனலுக்கு
..அரண்டு பணிந்த காலமது!
இன்றைய ஆட்சியரை எந்தச் சூட்டிலும்
..எருமை மாடாய் வைப்பதெது?

மானம் வெட்கம் இருந்தா லன்றோ
..மனிதன் சூட்டுக்கு பயந்திருப்பான்!
ஊனம் இல்லா ஆட்சி நடத்த
..ஒப்புக் கொண்டு நிமிர்ந்திருப்பான்!

அப்பரின் பாட்டால் சூலை நோயும்
..அப்படி யேஓடிப்போனதுவும்,
செப்புச் சுந்தரர் செப்பிய வரிகளால்
.. சிவனே நெருங்கி வந்ததுவும்,

பாட்டின் கனலுக்குப் பலத்த சாட்சி!-(எனில்?)-
..பழைய ‘டப்பா’ உதவிடுமா?
ஓட்டுப் பெட்டிகள் நிறைந்த பின்னாலே
..ஓட்டைக் கனலும் மதிப்புறுமா?-(ஆக)

கவிதைகள் படிக்க மனமே இல்லா,
 ...கற்றோர் இருக்கும் நாட்டினிலே
கவிதைக் கனலைப் பற்றிப் பேச
..கசப்புச் சுவைதான் நாவினிலே!

Monday, January 17, 2011

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?
மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்
..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!
ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை
..."ஆண்டால்",..மீசை வளர்வதுண்டு!
இங்க்லீஷ் எழுத்து "டபிள்யூ'போல்-ஐயா! 
..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?
பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!
.பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!"--
என்றே கேட்டால் சிரித்திடுவார்!-"கின்னஸ்"
..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!
இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,
..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்! 
பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர் 
..பத்து கலையும் அறிந்திடுவார்!
வீம்புக் கிதனைச் சொல்லவில்லை;-செய்யும்
..வேலை சொன்னால் மிகையுமில்லை!
ஈனும் பசுவுக் கருகிருப்பார்!-முதுகை
..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!
பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப் 
...பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!
காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்
...கரண்டி நெருப்பில் போடுகையில்,
வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்
..வட்டம் போடும் கலைதெரியும்!
ஜாதிச் சேவல் மடியில்வர,-கேப்பை.
....ஜலம்க லந்தே ஊட்டுகையில்
ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ 
..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!
விடலைப் பனையின் குருத்தெடுத்தே,-பாலர்க்கு
..விசிறி பண்ணித் தருகையிலோ
இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்
..ஈந்த 'சபரி" முகம்தெரியும்!
மீசை வளர்க்கும் கலையிலும்தான்,--லட்சிய
..வேட்கை அன்றோ தெரிகிறது! 
பூசை,'தெய்வம்' இவர்அறியார்!-உழைப்புப்
..."பொழுதே" கடவுள் என்றறிவார்!
கரணை கரணை யாய்க்கைகள்!- நல்ல
..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!
கருத்த உருவம், "காளி'யைப்போல்!-எனினும்
..கருணை வடிவம் அவர்இதயம்!

என் கணக்கு வாத்தியார்

என் கணக்கு வாத்தியார்


கணக்கிலே சுமார்யான்! என்றால்,
..கணக்கிலே கசப்புச் சேர்த்த
பிணக்குவாத் யாராய் ராமன்
...பிரம்படி கொண்டே தாக்கின்
கணக்குப்போ டுவனா?அன்னார்
..கண்கண்டால் ஓடினேன் காதம்.
மணக்கிற மல்லி கையில்-
...மலத்தினைச் சேர்த்தார் அய்யா!


..(வேறு-)-


உருட்டு விழிகள்! வட்டில்
..ஒப்பத் தலையில் பாகை!
சுருட்டு வீச்சம்! வாயில்!
..சுத்த ஆங்கி லத்தில்
வெருட்டும் திட்டு! மீசை
..வேறு! அய்ய னாரோ
இருட்டு வண்ண வாத்யார்?
..இவரின் பேரா ராமன்?


என்றே சிமிட்டும் கண்ணோ(டு)
..எவரும் நகைத்தார் அன்று!--
என்ன வாத்யார் அன்னார்
..என்றே பசங்கள் திட்ட,
தின்னும் பண்டம் போன்ற
..தேன்கணக் கிற்கும் அஞ்சி
மின்னும் பிரம்பின் வீச்சை
..மிகவே வாங்கி நொந்தார்!


குரலில் இடியின் ஓசை!
...குண்டு உடம்பால் தூக்கம்!
பொருட்டாய் மதியார் எம்மை!
..பொறுமை சற்றும் இல்லை!
அருமை கணக்(கு)என் னாமல்
..அதட்டும் உறுமல் சிங்கம் !
இறந்தார் மார்அ டைப்பால்!
..எனக்கோ நூறு மார்க்கே!

Monday, December 27, 2010

அறிமுகம்..

கவியோகி வேதத்தின் கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் விவரம்:-

1)- காயத்ரியின் காதல்..(போட்டியில் முதற்பரிசு பெற்ற குறுங்காவியக் கவியும் பிறவும்)--சொந்தப் பிரசுரம்-ஜூன்1981-இல்

2)-எளிய யோகாசன முறைகள்-(சமூகநலனுக்காக பலர் வேண்ட,நூல் ஆக்கப்பட்டது)-Publisher-புத்தகப் பூங்கா-டிஸம்பர் 1983(35000 பிரதிகள் விற்பனையாயின)

3)-வள்ளல் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர்--(this is about Sree kaanchi Mahap periyavaaL-)பப்ளிஷர்- ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயம், சென்னை-41நவம்பர்-2003.

4)-கவியோகி கவிதைகள்
Published in Dec2007--by LKM publications, T Nagar, Chennai-17

5)-போகமும் யோகமும்-(Essays on Bakthi Literature as to What is Bhoga and what is Yoga)- by LKM publications , Chennai-17 in March 2009

6)-தியானமும் யோகாசனமும்-- (Essays on Meditation and Asanas) Published for doing good to Whole HUmanity, by LKM publication, Chennai-17...in June 2010

இவரது இலக்கியச் சேவைகள் + பங்களிப்புகள்;-

1) 1966 இலிருந்து இதுவரை தமிழ் இலக்கிய உலகில் 600க்கும் மேற்பட்ட கவியரங்கம்,பட்டிமன்றம்,தனிப்பேச்சுக்கள் நிகழ்த்தியுள்ளார் இவர்..

2)- மேலும் இதுவரை கல்கி, ஆநந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் 250க்கும் மேல் இவரது கவிதைகள்+ பாரதி பற்றிய பற்பல கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன..

3)-சமீபத்தில் 2008இல்(ஆகஸ்ட்) கானடாவில்(Massachussets)- ‘சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்’என்னும் தலைப்பில் 1 மணி நேரத்திற்கும் மேல் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்..

4)-சிங்கப்பூரில் பிப்ரவரி 2008-இல் சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும் பற்றி ஒன்றரை மணி நேரம் பேச்சு நிகழ்த்தியுள்ளார்.

5)-இவை தவிர 1996 இலிருந்து(ரிசர்வ் வங்கியில் ஓய்வு பெற்றபின்)தொடர்ச்சியாக இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார். சமுதாயத்தில் அனைவருமே தான் யார்? உலகிற்கு என்ன காரணத்திற்காகப் பிறப்பு எடுத்தோம் என்பதை ஒவ்வொருவரையும் உணரச்செய்வதற்காகவே தீவிர மனப்பயிற்சி கொடுத்துவருகின்றேன் என்பார் இந்த பூரண யோகியார். ..

யோகியார் என்னும் பெயரில் இதுவரை பற்பல கவிதைகள், யோகா ஆலோசனைகளை தமிழ் இணையங்களில் எழுதிவரும் இவரது சமுதாய சேவைகளைஎவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சரணாகதி

சரணாகதிப் பெருமை சம்சாரி நாமறிவோம்!(சன்யாசி அறிவானா?)
சரணாகதித் தத்துவம் நாம் அறியாமல் இருந்தால்
இரவு,பகல் உணவு ஒழுங்காய் இல்லறத்தாள் தருவாளா?
முறைப்பது அவள்உரிமை! முனகாமல் எதிர்க்காமல்(நாம்)
சரண்டர் ஆனால்தான் சகலமும் கிட்டும் அன்றோ?
முறையாய்இத் தத்துவம் இல்லறத்தில் இருந்தேதான்
போர்க்களத் திற்கும் அரசியலுக்கும் போனதென்பேன்!
.(பசங்களிடமும் நாம் சரண்டர்!)ஆம்!
கார்த்தாலே பிள்ளையை எழுப்பியபின்,குளிக்கவைத்தால்,
போர்க்கோலம் செய்து,அவன் போகேன்பள்ளி என்றால்,
முகவாய் தடவி முன்னூறு முத்தம்தந்து,
அவனைப் பள்ளிக்கு அனுப்பும் "தாஜா' வகையே
சரணாகதிக் கொள்கைக்கு "சத்த"மான பொருள் என்பேன்!
திருமணப்புதிதில்,
அறுபதுநாள் மோகத்தில் "ஆமாம் ஆமாம்" போடுவது
சரண்டர் பாலிஸியின் சரியான முதல்விதி!
அறுபது கடந்தபின் அவளுக்கு அடிமைஎனல்
சரண்டரின் விதிகடந்த கிழவரின் தலைவிதி!
இது குடும்ப"சரண்' அகராதி_
இராமனையே நன்கறிந்த இராக்கதன் விபீஷணன்
இராவணன் தோற்றபின் இலங்கை அழிந்திடுமே,
என்ற-ஒரு பயத்தால்தான் இராமனைச் சரணடைந்தான்!
இன்று இவனுக்கு அபயம் அளிக்காதீர்! என்றுபல
குரங்குகளும்,சுக்ரீவனும், இலக்குவனும் எதிர்த்தபினும்
அருமை'இஷ் வாகுவீரன் அவர்கட்குச் சொன்னானே!
.
"சரண்'என்றே வந்தவற்கு சரியென் றதுதந்து,
முறையாகத் தழுவி முழு அபயம் கொடுப்பதே
..
என்போன்ற வீரற்கு இஷ்வாகு குலத்திற்குப்
பொன்'அழகு! எதுவரினும் பூரணமாய் எதிர்த்துநிற்பேன்!
..
இவனுக்கு இப்போதே இலங்கைமன்னன் என்றுபட்டம்
சுவைபடச் சூட்டு"இலக்குவா!'என்று பணித்தானே!
..
அந்த'இராமன் தந்துநின்ற அபயத்தி லிருந்துதான்
இந்த'சர ணாகதி'ச்சொல் இங்கிதமாய் வந்ததென்பேன்!
..
ஆண்டாளின் பாடல்களும்,,ஆழ்வார்கள் பாசுரமும்
"ஆண்டவா!நான் உன் அடிமை! அடியேனை ஆட்கொள்வாய்!".
..
என்று"சரண்' தத்துவத்தை எழிலுடனே விளக்கிநிற்கும்;
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கேநாம் ஆட்செய்வோம்"
.
என்றே சரணடைந்து எம்பெருமான் உடன்கலந்து
அன்றே சரணாகதிப்  பெருமையை உணர்த்தலையா?
..
ஆழ்வார்கள் தம்மை நாயகியாய்ப் பாவித்து(த்தான்)
வாழ்விக்கும் பெருமாளை நாயகனாய்ப் பாவித்தார்!
..
ஆண்டாளோ உடம்பாலும் நாயகியாய் இருந்தாளே!
ஆண்டவ னைப்பாடி அப்படியே கலந்தாளே!
..
இதைவிட சரணாகதிப் பெருமை'எவ் வாறுசொல்வேன்? 
சதை'அறுத்துச் சரண்'பெருமை தந்த'சிபி கதைசொல்வேன்!
..
சிபி'என்ற  பேரரசன் சிறிய'புறா சரண்எனச்
சபைநடுவே வந்துவிழ, சட்டென அவன்தூக்க,
என்உணவு அது' என்றே பெரும்கழுகு வாதுசொல்ல,
தன்சதையை அறுத்தானே, தளராது கொடுத்தானே!
..
அந்தசிபி அன்றோ சரண்'ரூப மாய்நின்றான்!
நந்தம் இராமனினும் நால்மடங்கு உயர்ந்துவிட்டான்!!
..
தியாகராஜரின் "துடுகுகல"(கௌளராகக்) கீர்த்தனை கேட்டிருப்பீர்!
தியாகம் செய்தஅவர் தமக்காகவா, 'அபயம்' கேட்டார்?
.
நமக்காக அன்றோநம் பிரானிடம் சரண்'கேட்டார்?(அதைத் தமிழில் சொல்வேன்)
(வினையிலழுந்தும் மானுடம் மேன்மைபெறப் பிரார்த்தனைஅது)
துடுக்குகள் புரியுமென்னை தூயவனே காப்பீரோ?
பிறர்தனம் கோரி வயிறுநிரப்பித் திரிந்தேனே!
.
ஊழ்வினைப் புவியில் சௌக்கிய ஜீவனமே
வாழ்வுஎன ஸதாதினம் கழித்தேனே ராமா!
பெண்டிற்குச் சிலகாலம்,மண்ணிற்குச் சிலகாலமெனப்
பணம்திரட்டிப் புவியில் அலைந்தேனே இப்பாவி!
த்யாகராஜ நேசனே எனைநீ காப்பாயோ?
..
என்றழுதே விதவிதமாய் எம்பிரானை எவ்வாறு
சரண் அடைவதென்னும் "சங்கதிகள்' தந்தாரே!
பழியெல்லாம் நமக்காக ஏற்று"க்ருதி' நெய்தாரே!
அதேபோல் ,
 நாயன்மாரும்"நாமார்க்கும் குடியல்லோம்,மீளா ஆளாய்க் கோமார்க்கே சரணானோம்
என்றும்,அன்னே! நின்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே!.என்றும்,
சிவனே உன் அபயம் நானே!
..என்றெல்லாம் நமக்காய்ச் "சரண்'பாடி இறைகலந்தார்!

சோதிக்கநேர் வந்தசிவன் சோதியிலே கலந்துகொண்டார்!
..
சகல எதிர்ப்பினையும் "சரணாகதி' ஒன்றால் வெற்றிகண்ட
மகான்களைப் பாடியே மனதைச் 'சரண்' கொடுத்துவிட்டேன்!
..
வாழ்க சரணாகதித் தத்துவம்! வாழ்க ஆழ்வார்கள்!

சின்னச் சின்ன சுகம் எனினும்..

புதிய தோட்டம்!..உலவுகின்றேன்;-வேப்பம் 
...பூக்கள் என்மேல் உதிர்கையிலே
விதியை மாற்றும் ‘சக்தி’ என்னுள்-தூவும்
...வெற்றி என்றே உணர்கின்றேன்!
நதியின் ஓரம் நடக்கையிலே,-குளிர்
...நடுக்கி உடம்பு சிலிர்க்கையிலே
புதிதாய்க் கவிதை கனன்றுவந்து-சூடு
..புணர்தல் ரசித்து மகிழ்கின்றேன்!
காட்டில் பசியால் மயங்குகையில்--ஒற்றைக்
..கருப்புக் குயிலின் கூவலிலே
மீட்டும் உணர்ச்சி பொங்கிவர,--என்
..மீண்ட சொர்க்கம் கண்டுகொண்டேன்!
நீண்ட வாழ்க்கை  வெம்மையிலே--அமுதம்
 ..நெஞ்சில்  ‘சொட்டும்” காட்சி இவை!
தீண்டும் ”சக்தி”க் கைபட்டால்--எந்தச்
... சின்ன சுகமும் இனிக்காதோ??

தங்கச்சிப் பாப்பா

என்னையும் அடிப்பார் அப்பா!
..என்தாயும் அடிக்குத் தப்பாள்!
கன்றுபோல் துள்ளும் பாப்பா
..கடிந்த ‘சொல்’ கூட வாங்காள்! 

இன்றுடன் வயதி ரண்டாம்!
...இவளேஎன் தங்கைப் பாப்பா!
பின்னேஓர் வால்தான் இல்லை
...பீமன்போல் விஷமக் குண்டு!
தேவிபோல் வளைய வந்தாள்! 
..தெருவுளோர் கொஞ்ச வந்தார்!
பூவைப்போல் சொகுசுக் கையால்
..பூஜைப்பூ இறைத்தி ளிப்பாள்!

நாவினால் சின்னத் திட்டும்
..நாங்களும் செய்த தில்லை!! 
தூவுவாள் மணலை என்மேல்!
..துளிச்சினமும் கொண்ட தில்லை!!  
பாய்ந்துஓ! குதிப்பாள்! ஓயாள்!
..பணிந்ததாய் வேட மிட்டுச், 
சாய்குவாள் அப்பா வின்மேல்! 
..தந்தையும் கொஞ்சி நிற்பார்!

பாய்ந்(து)என்றன் பாட நூல்நான்
..பதைத்திடக் கிழிப்பாள் ;ஏனோ 
சாய்ந்தனள் விஷச்சு ரத்தால்!
....சரியாக யமன்மேல் கோபம்!!
எத்தனை ஊசி இட்டார்!!
..எத்தனை  மருந்து வாய்க்குள்!
சொத்(து)அனை பாப்பா கொண்டு  -  
..சூரன்போல்  ‘அவன்’சி ரித்தான்!

குத்தினோம்  “கந்த” னையே!!
..கும்பிட்டும் உதவ லையே!!
எத்தனைப் பணமி ருந்தும்
.எமனுமே மசிய லையே!!