Friday, December 16, 2011

குஜராத்தில் ஒரு வள்ளி!

குஜராத்தில் ஒரு வள்ளி!

எத்தனை கொஞ்சமாய்த் தந்தாலும்
..எந்தவே லையையும் அன்றுசெய்தார்!
இத்தனை ரூபாய் கொடுத்தால்தான்
..இன்றைய வாலிபர் செய்வனென்பார்!

இந்த நிலைஎண்ணி ஓர்நாள்யான்
...என்றன் சகோதரன் காரிலேயே
அந்தக்  ‘குஜராத்தின்’  ‘சண்டிப்பூர்’
...அழகு நகரினைச் சுற்றிவந்தேன்!

பாதை மருங்கிலே ஆலமரம்,
..பாக்கும், அசோகும் இலையசைக்கும்;
வேதனை வெய்யிலின் சூட்டை,அவை
...வெகுவாய்க் குறைத்து வரவேற்கும்!

 “அண்ணா!அதிசயம் இவ்வூர்தான்!
...அழகுக் கடற்கரை பார்ப்பாய்நீ!.”-
  எண்ணி இருமுறை சொல்லிடும்முன்
...இருவரும் கீழே இறங்கிநின்றோம்!

‘ஆகா! பலேபலே!’ என்றேன்யான்!
...ஆகாயம் மேகமுடன் ஓடுதல்போல்
பாகாய்க் கடல்நீர் பயத்துடனே
..பட்டென்(று)என் கால்தொட்டுப் பின்வாங்கி

ஓடியதும் அச்சமுடன் கூவிவிட்டேன்!
..உடன்தம்பி சொன்னான்!  “சிறப்பிதுவே!
நாடிவரும் சுற்றுலா மாந்தரைப்பார்!
..நாலுமணி நேரமிங்குக் காத்திருப்பார்!

பின்வாங்கும் நீர்ஒரு- ஐந்துமைல்கள்!
..பிறகுபார்! ஆச்சர்யம்! ஓடிவரும்!
என்னவோ தாகமுடன் காதலியை
..இன்பமாய்ப் பார்க்க நழுவுதல்போல்

நாலுமணி ஓடிப்பின் மீண்டுவரும்!
..நம்முடனும் கொஞ்சமாய்ப் பேசவரும்!
கோலமிதைப் பார்க்கத் தினம்நூறாய்
..குழுமுவர் மக்கள்! படம்எடுப்பர்!.”-

மூக்கில் விரல்வைத்துக் கேட்கையிலே
..முன்நின்றாள் ஓர்சிறுமி பைகளுடன்!
மூக்கிலே பாசிமணி--ஓட்டையிட்டு!
..முரண்பட்ட தோடுகள் காதுகளில்!

மேனியில் பட்டினில் ஜாக்கெட்டு!
..மிகக்கிழிசல் பாவாடை கால்தொட்டு!
மேனியின் வண்ணமோ மாநிறம்தான்!
..மிகநீண்ட கண்வரை, புன்சிரிப்பு!

 “நண்டுசார்! ஓர்ரூபா! வாங்குங்க!-
.....நல்லதுசார்!  ‘புச்சு’சார்! பார்த்துக்குங்க!
 கொண்டுஅவள் என்கை பிடித்ததுமே
....கூச்சமுடன் சொன்னேன்யான்,  “வேண்டாமே!”

 “கத்தரிக்கா கொண்டுவா வாங்கிடுவோம்!
......கரைநண்டை நெஞ்சாலும் நாங்கதொடோம்!-”
  ‘பத்ரி’தம்பி கண்சிமிட்டிச் சொல்லிடுவான்!
...“பாப்பா! தமிழ்நல்லாப்  பேசறியே!”-

“ஆம்சார்ரு!-நாங்கமத்ராஸ் காரங்கதான்!
...அங்கே பொழப்புக்குப் பஞ்சம்தான்!
‘வேம்பம்மா-’ச் சித்தியோடு இங்குவந்தோம்!
...விதவிதமா மீன்பிடித்தே விற்கின்றோம்!-”

“உங்கப்பா என்னவேலை செய்யறாரு?”-
...“ஓடிஓடி சைக்கிள்ரிக்‌ஷா ஓட்டறாரு!
எங்கம்மா கூடைபோட்டு மீன்பிடிப்பா!
...இந்த‘தண்ணி’ பின்-ஓட, எங்கவாழ்வு!”

உன்பேர்தான் என்ன?என்றேன்; ‘வள்ளி’என்றாள்!
...ஒருஸ்கூலும் போகலியா? என்னுமுன்னே
என்னங்க நாலாங்க்ளாஸ் படிக்கிறேங்க!
...எல்லாப் பரிட்சயிலும் ‘ஃபஸ்ட்’நான்க!-”

என்றுசொல்லி  ‘இங்கிலீஷ்ரைம்’ பாடிநின்றாள்!
...இதற்குள்ளே மூவரிடம் நண்டும்விற்றாள்!
நன்றுநன்று என்றே புகழ்ந்துரைத்து,
...“நாளுக்கும் என்னரூபா கிட்டுமென்றேன்”

“அடபோங்க!..பத்துநண்டு அம்பதுகாசு(னு)
.....அடிச்சுசொல்லி கைதிணிச்சு வாங்குறாங்க!
முடவங்க தேனுக்கா  ‘ஆசெ’வெப்போம்?
......முடிஞ்சவரை வித்துபிட்டு ஸ்கூல்போவென்!

வாரநாள்ல பைஒண்ணும் விக்காது(சார்!)-
...மத்தநாள் ஞாயிறன்னி கூட்டம்வரும்!
சூர்யன் உதிக்குமுன்ன இங்குவந்து
...சொரசொரன்னு நீர்ஓட நண்டுபிட்சு

மாலையிலும் பையவித்து ராவுபடிப்பேன்!
...மனசார அஞ்சுரூபா ஜேப்லவப்பேன்!
‘கூலான’ அச்சிறுமிச் சொல்கேட்டு
....கொடகொடெனக் கண்ணில்நீர் கொட்டுதய்யா!

 “சரியம்மா (ரூ)அஞ்சுக்காய் ஏன்கஷ்டம்?
.....சாப்பிட்டு வீட்டில் படிக்கலாமே!..”--
 “சொரிஞ்சுகினு வீட்டிலஏன் நிற்கோணும்?
.....சொதந்த்ரமா அஞ்சுரூபா கிட்டுறப்போ?

அஞ்சுரூபா உப்புபுளி வத்தல்க்காவும்!
...அப்பாம்மா நெஞ்சமும்நி றஞ்சிருக்கும்!.”--
‘கொஞ்சி’சொன்ன வள்ளிகையில்  ‘பத்து’வைத்தேன்!
...கோபமுடன் ஓர்முறைப்பு,.. கண்ணிலய்யா!

 “என்னய்யா? பிச்சகாரி இல்லநானு!-
.....எங்கிட்ட பையயும்நீ வாங்கலய்யா!
  உன்காசை  வச்சுக்கோ!-”கைதிணித்தாள்!--
.......உயர்ந்துநின்றாள்! கண்முன்னே தெய்வமானாள்!