Friday, December 28, 2012

ஒரு 'குறுக்கிய' மரத்தின் குலுங்கும் அழுகை

ஒரு 'குறுக்கிய' மரத்தின்('போன்ஸாய்''.ன்)குலுங்கும் அழுகை--
(நாட்டுப்பாடல்--கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)-

வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா?-சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா?- எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?
(*ஜப்பான் குள்ளன்)

அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா?-தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா?-அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா?-மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா?-என்ன
தெய்வக்'குத்தம்' செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா?-சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ-முறுக்கறேடா!
உன்நாத்த குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ?-ஏன்!
ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும்-மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ?-எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

'சைக்கோசெல்' திரவம்விட்டு மேலும் குறுக்கறே!-உன்
'சைக்கோத்'தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா!-பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ?-'மர'
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ?-அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது!-நீ
செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா?-மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?

Tuesday, September 25, 2012

கற்பதெப்போ?

கற்பதெப்போ?

வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
வாகாய்க் குழைப்பவன் நீயா?
கூனல் இளம்பிறைச் சில்லில்  அழகினைக்
கூட்டும் சிற்பியும் நீயா?

வண்ணத்துப் பூச்சியின் றெக்கையைப் பிடித்தே
வர்ணம் தீட்டுவோன் நீயா?
சுண்ணமே தீட்டாது  புறாவினில் வெண்மையைச்
சுடரவே  விட்டவன் நீயா?

என்னஓர் விந்தையும்  இஃதுபோல் செய்யாமல்
எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாகச்
செய்திடும் தன்னல மானிடனே!

மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

பாதையில் போகையில் வாகனம் மோதினால்
பார்த்துநீ  ‘அவரை’யே காத்ததுண்டா?
சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
சுணங்காது உதவிகள் செய்ததுண்டா?

பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
‘தேவனாய்’ உயர்--வழி என்றுகற்பாய்?

Sunday, August 5, 2012

கணினி நொந்து பேசுகின்றேன்!

கணினி நொந்து பேசுகின்றேன்!

என்ன தந்திர உலகமடா!-மனிதா!
.. இதுவும் உனக்கொரு பிழைப்போடா?
என்னில் இருக்கிற பணந்தன்னை-ஒரு
.. எண்ணைக்*கொடுத்தபின் எடுக்கின்றாய்;
வன்ன ஆமையின்  முட்டைகண்டே
.. வாகாய்ப் பாம்புமே திருடுதல்போல்
உன்னிப் பாய்உனைக் கவனித்தே
..ஒருவன் உன்பணம் கொள்ளைசெய்வான்!..(என்ன..)
* ஏ.டி.எம்-பாஸ்வர்டு

கன்னிப் பெண்களின் வரன்தேட,
.. கார்டு மூலமே பொருள்வாங்க,
முன்னம் பாடிய பலர்பாடல்
.. மூன்று வேளையும் கேட்டுவிட,
சின்னத் தகவலும் *உறவினர்கண்....(*ஈமெயில்)-
.. செலவே இன்றிநீ சேர்த்துவிட,
என்றே எத்தனை உதவிசெய்தேன்!
.. என்னுள் கிருமிகள்* புகுத்துவதோ?..(என்ன..)
*(வைரஸ்)

என்னைத் தட்டியே முழுஉலகை
.. எட்டிப் பார்த்துமே மகிழ்கின்றாய்!
என்ன படிப்புமே என்மூலம்
.. எளிதில் கற்றுநீ வாழ்கின்றாய்!
உன்றன் பேரனும் தொலைதூரம்
.. உள்ள பாட்டனைக் காண்கின்றான்!*.....(*Chat மூலம்)-
என்ன செய்தும்என்? இதோபரி(சு)என்***
.. றெங்கோ ஒருவனை ஏய்க்கின்றாய்!*...(என்ன..)
(* by Fraud emails)-

காலை யில்காப்பி! பின்கணினி !
.. கடையில் வறுவலை  வாங்கிடவும்,
ஓலை இன்றியே கற்றிடவும்,
.. ஒற்றைக் காசுமே தராமலதை
நாலைந் துபேர்க்குமே விற்றிடவும்,
.. நல்ல   'கொள்ளைகள்‘அடிக்க-எனை
வேலை செய்யவே வைத்துவிட்டாய்;
.. விஷமம் செய்வதேன்  ‘செக்ஸ்- ‘இழை’யில்?’..(என்ன..)

ஸீரோ(‘0’)- ஒன்றையே உண்கின்றேன்!
.. சிறப்பாய் உனக்கென உழைக்கின்றேன்!
யாரோ தொடினும் வரமாட்டேன்!
.. எனக்காய்க் குறிப்பு*எண்  நீதந்தால்!...(*பாஸ்வொர்ட்)-
நேராய் உலகினை வலம்வருவேன்;
.. நிறைய  ‘கூகிலில்’* பொருள்தருவேன்;..(*google)-
சீராய் என்னைநீ வைத்திலையேல்
.. சிறப்பும் உனக்குமே வந்திடுமோ?...(என்ன..)

Wednesday, May 30, 2012

ஊதுபத்தி

ஊதுபத்தி

தமிழர்கள் நகைச்சுவையாய்ப் பேரை வைத்துத்
...தம்போக்கில் சிரிக்கவைப்பர்!;.ஒல்லி ஊசி
அமைதியாய் உதவுகையில் ‘குண்டு’ -ஊசி
..எனஅழைத்தே அதைப்போய்க்கிண் டலடிப் பார்கள்!
மமதையில்லா மாமியைப்போய் ‘ஊதிவிட் டாயே
..மாலு!’என்றே நகைப்பதுபோல் குச்சி என்னைச்
செமையாகச் சீவியபின் என்மேல் தூளைத்
..தீண்டிவிட்டு,..’ஊது-பத்தி’என்ன லாமா?


அழுதழுது புகையாகக்  ‘கரை’யும் என்னை
...அநியாயம்!  ‘ஊதிய’ஓர் பத்தி என்றால்?
அழுகின்றேன்;-உமைச்சுற்றி மணக்க வைக்க
..அபலைநான் கிடைத்தேனோ? உடம்பே போச்சே!
பழுதுபட்டேன் என்றாலும் கடவுள் முன்பு
..பற்றவைத்தீர்! போகட்டும்! உம்உ டம்பின்
அழுக்குமணம் சன்னதியில் சேரா வண்ணம்
...அழகுறவே நான்மறைப்பேன்! தியாகி யானே!


நாத்திகனோ  ‘சிகரெட்டை’அருகில் ஊதி
..நானு(ம்)உன்போல் புகைவிட்டேன்! எனம கிழ்வான்!
சாத்திரம்போல்  ‘நான்நீயும்’ ஒன்றே என்பான்;
..சன்னதிக்கே வந்துபுகை விடுவேன் என்பான்!
ஆத்திரமே படுகின்றேன்; திருத்து வார்-யார்?
..அதோ!ரயிலும் புகைவிடுமே..!எல்லாம் ஒன்றா?
ஆத்திகனாய் மாறியபின்  ‘அகம்’க ரைந்தே
..ஆண்டவன்முன் ‘அழுது’ஒன்றும் தத்துவம் யான்!


இந்தஉண்மை தனைப்புகையாய் ஊதிச் சொல்லும்
..எளியவன்யான் என்றுணர்ந்தே பக்தர் எல்லாம்
வந்தித்தே ‘ஊதுபத்தி’ எனப்பேர் தந்தார்!--
..வக்கணையாய் எனைஏற்றி கடவுள் முன்னர்
பந்தமுடன் சுற்றிடுவார்! பக்தி கொண்டே
..பாடிடுவார்! நெடுநேரம் மணந்து நிற்பேன்!
சொந்தமென எனைப்புகழும் தமிழர் நீங்கள்
..தூயஇந்தத் தத்துவம்-பின் பற்று வீரே!!

ரமணத் தேன்கூடு!

ரமணத் தேன்கூடு!

அண்ணா மலையிலோர் தேன்கூடு!-உள்ளே,
.. அழகிய ராணி “ஈ” முனி.யோடு!....
‘ரமணம்’ சாய்ந்தே அமர்கிறது!-சமாதி
   . ரகசியம் பொங்கி வழிகிறது!
அமைதியிலோர் ‘அக்னியே’ பூக்கிறது!-(ஆம்)அது
   ..அவரது கண்ணாய் மலர்கிறது!
ஞானம் கமழ்ந்திடும் நந்தவனம்!-அந்த
   .ஞானியைச் சுற்றிப்பல் அன்புமனம்!
ஊனம்,..அமர்ந்தாலே ஓடிடுதே!-தேவர்
   .உலகம் நமக்குள் விரிகிறதே!
குகையுள் அலர்ந்தநல் தாமரையாம்!-ரமணர்
   .கூட்டிய ‘நிஷ்டை’ஓர்  பாற்கடலாம்!
திகைந்தனர் பக்தர்கள் சேவையிலே!-கூடித்
   .தெவிட்டா  அமுதம் பருகினரே!
குரங்குகள், நாய்கள், பசுக்களுமே-அருள்
   .குவிந்த ரமணர்ப் பசங்களுமாம்!
அருமை!.அவர்க்கெலாம் முன்னுரிமை!-மடி
   .அமர்ந்துமே உண்ணல் தனி-உரிமை!
ஒருசொல்,அறிவுரை ஏன்இல்லை?-கேள்விக்(கு)
   .ஒன்பது நாள்போல் பதில்இல்லை?
பெரிய மனிதரும் காத்திருப்பு!-ரமணரின்
    ‘ப்ரம்ம’ மவுனத்தில் விடையிருக்கு!
எத்தனை எண்ணம்!கலக்கங்கள்!-கண்ணுடன்
  .இழைந்து கலந்தால் மறைந்திடுதே!
முத்துக் குளிக்கவே வாருங்களேன்!-அட!
   .மூழ்கியே இன்பமாய்ச் சேருங்களேன்!!