Tuesday, September 25, 2012

கற்பதெப்போ?

கற்பதெப்போ?

வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
வாகாய்க் குழைப்பவன் நீயா?
கூனல் இளம்பிறைச் சில்லில்  அழகினைக்
கூட்டும் சிற்பியும் நீயா?

வண்ணத்துப் பூச்சியின் றெக்கையைப் பிடித்தே
வர்ணம் தீட்டுவோன் நீயா?
சுண்ணமே தீட்டாது  புறாவினில் வெண்மையைச்
சுடரவே  விட்டவன் நீயா?

என்னஓர் விந்தையும்  இஃதுபோல் செய்யாமல்
எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாகச்
செய்திடும் தன்னல மானிடனே!

மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

பாதையில் போகையில் வாகனம் மோதினால்
பார்த்துநீ  ‘அவரை’யே காத்ததுண்டா?
சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
சுணங்காது உதவிகள் செய்ததுண்டா?

பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
‘தேவனாய்’ உயர்--வழி என்றுகற்பாய்?