Sunday, April 26, 2020


 My new Poem
**************
கற்பனைத் தேரேறி கவலையை மற;-
&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)26-04-20
கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
  கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
   அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?
.
 விண்ணில்உன் கற்பனை பாய்ந்து நின்றால்
   மேவிடும் காட்சிகள் இன்பமடா!-மனக்
 கண்ணிலே தென்படும் அமுதக் குடம்
   கவலை- அசுரரை மாய்த்துவிடும்!

 வளைந்து வானிலே பாயும்அந் நாரைகள்
    மாயையடா இந்த உலகம் என்னும்!
 உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாக விண்ணிலே தேய்ந்து விடும்!!
   


Tuesday, April 28, 2015

சரணாலய அழகில் மயங்கி...

காலையில் முனகலாய் மதியம் சத்தமாய்
வேலை நிகர்த்த சொற்களாய்த் துளைக்க,..
காதைக் கிழிக்கும் சண்டையாய் முடிந்த
‘வேதனை தாம்பத்யம்’ நெஞ்சை வருத்த
மாலையில் கால்கள் தாமே பறவைச்
சோலைச் ‘சரணாலயம்’ நோக்கி இழுத்தன;
மனப்பறவை இறகுப் பறவைகளின் நாதத்தில்
மினுங்கி, முயங்கி, மகிழ்வுற,சாந்தமுற,
கொஞ்சம் கொஞ்சமாய்,-- குழப்பிய அந்த
வஞ்சச் சோக அலைகள் இயற்கையின்
அழகில் மொத்தமாய்க் கரைந்து போயின;
விழிகள், கவி-உள் அருவியோ டிணைந்தன;
எதிரே பார்க்கையில் விமானப் பாய்ச்சலாய்
முதிர்ந்த  புள்ஒன்று நீரை முட்டியதில்
உதிர்ந்தஓர் இறகின் வலியில் முனகி
பதமாய்க் கோதிப் படமாய்க் காட்டியது!
என்ன வேதனை? என்றே கேட்ட
வன்னத் துணையும் மருங்கில் அமர
இரண்டும் இப்போ நீண்ட மூக்கால்
உரசியே ஆகாயம் உற்றுப்பார்த்தன;
பெண்புள் கரிசனம் நெஞ்சைத்தொட்டது.
கண்ணால் பேசிய ஆணும் விழுங்கிய
மீனின் துணுக்கை ஊட்டி மகிழ்ந்தது;
வானிலும், புள்ளிலும் நிலவிய ஊடல்,
முடிந்தபின் கூடல் எனக்குஏன் இல்லை?
கடுமைதான் வாழ்க்கையா?கனிவிலா உறவா?
என்றே நினைக்கையில் எதிரே ஒரு-புள்
தன்அலகு திறந்து தளிர்நாக்கு நீட்டி,
எங்கோ அலைந்த தன்இணை அழைக்க
சங்கின் ஒலிபோல் நீரெலாம் அலை-அலை.!
இரண்டும் பரப்பில் இணைந்து கூடவும்
முறிந்தஎன் இரவுகள் மனத்தைப் பிசைந்ததே!
மீனே வேண்டாம் எனக்{கு}என் பதுபோல்
வீணே பறந்தஓர் புள்ளை மற்றவை
பார்த்துக் கலாய்க்க பட்டென ஒருமீன்
நேர்த்தியாய்த் துள்ளி வாய்க்குள் விழவும்,
புள்ளின் நாடகம் கண்டே அவைபோல்
துள்ளிஎன் கவிஉளம் தொடுத்தது சொற்களாய்!
பலப்பல வண்ணம்; பலப்பல ஆடல்;
சிலும்பிய காதல் சிறகுகள் நடனம்;
எல்லா அழகையும், இனியபல் அசைவையும்
பொல்லா மாலையின் பொழுதில் ரசித்தபின்,
எரியும் இரவை எண்ணியே திரும்பினேன்;
முறிந்ததோ இன்றைய நாளின் பரவசம்?
எனமனம் நொறுங்கும்; வாசலில் பார்த்தால்!..
 ‘என{து}இணை’ ..தளும்ப,.. இருகை அணைத்தே
வாரீர் விருந்தை உண்பீர்! வழங்குவீர்!
சோர்வே வேண்டாம்;சுகிப்போம் என்றதே!

Friday, April 24, 2015

சிரிப்புக் குரங்குகள்!

நண்பன் அழைத்திட நாவலூர் சென்றேன்!
.. நடுவழி! மக்கள்  ‘தர்ணா’;   இறங்கினேன்;
மண்டை   கிழிய  பெண்களின் கோஷம்!
.. "மனத்தை வாட்டிடும்  குரங்கை ஒழித்திடு!”
*
பாதையின்  குறுக்கே  படுத்தும்  அவர்கள்!
.. பதமாய்க்  காவலர் சொல்லியும்  கேட்கலை!
“வேதனை  ஐயா   குரங்குகள் தொல்லை!
.. விடிவு  தெரியாமல்  நகர்வது   இல்லை!..”-
*
குரங்கை  ஒழிக்கப்  பாதையை  மறிக்கும்
.. கூட்டம்   கண்டே  சிரிப்புவந்  தாலும்
“குரங்குகள்  கூட்டமாய்  வீட்டினுள்  வந்தே
.. குழந்தைகை  கடித்துப்  பண்டம்  பிடுங்குதே!
*
மதியம்  தூங்கிடில்  அடுக்களை  காலி!
.. மாலையும் காலையும் விரட்டலே ஜோலி!
பதைத்துக்  ‘கலெக்டர்’  உடன்செயல்  படணும்!
.. பாவியா  நாங்கள்-ஏன் அவஸ்தைப்  படணும்?
*
முனியனும்  கனியனும்   மந்தியூர்க் காரர்கள்!
.. முன்னால்  வந்தே   கலெக்டர்முன்  நின்றனர்!
இனிமையாய்ப்   பேசி.. “ஆயிரம்’ கேட்டனர்!
.. எல்லாக்  குரங்கையும் பிடிப்பதாய்ச்  சொல்லினர்!
*
ஒவ்வொரு  குரங்கும்   சாக்குப்  பையில்!
.. ஓட்டியே  சென்றனர்  கூண்டு லாரியில்!
செவ்வையாய்க்   கூடவே   இருவரும்  சென்றனர்!
.. சிரித்த   ட்ரைவருடன்  எங்கேயோ  விட்டனர்!
*
அடுத்த  வருடமே   ‘கீவளூர்’  பாதையில்
.. அட்ட  காசமாய்  மக்களின் மறியல்!
படுத்தின  அதேஅதே  குரங்குகள்  கூட்டம்!
.. பாவி   ‘முனியனுக்கு’ப்  பணத்திலே  நாட்டம்!

Tuesday, November 19, 2013

கண்போல் பக்தரைக் காக்கும் காளிகாம்பாள்

கண்போல் பக்தரைக் காக்கும்  காளிகாம்பாள்

பாரதியார் தினம்வணங்கிச் சிலிர்த்த தேவி!
.. பாடல்களை அவர்நாவில் வழங்கித் தேனின்
சாரம்போல் தான்இருந்த அன்னை! பக்தர்
...சன்னதியில் நெகிழ்ந்துநின்றால்  தானும் சூஷ்ம’ப்
பாரமுடை மனம்கொண்டே கனியும் அன்னை!
....பலவரங்கள் தரும்அம்மா! மலடி என்ற
சாரமில்லாத் திட்டுகளால் நொந்த பெண்கள்
...தாய்மைபெற்றார்! அருள்வாளே “காளி” காம்பாள்!

கடற்கரையில் முதன்முதலாய்த் தோற்றம் கொண்டாள்!
...கனிந் (து)இங்கே  தம்புசெட்டித் தெருவில்  தானே
இடம்பெயர,  விஸ்வகர்மாக் குலத்தோர், “தாயே!”
....எனப்போற்ற, அவராலே கோவில் கொண்டாள்!
படைவாளைச்  சத்ரபதி   “சிவாஜி”,  முன்னால்
... பணிந்துவைத்தார்! “இவள்”போரில்  வெற்றி தந்தாள்!
அடையாளம்,(?)- இவண்‘சிலை’யாய்க்  காண்பீர்! பாட்டால்
... ஆர்ப்பரிப்பீர்! அருள்பெறுவீர்! உணர்ச்சி கொள்வீர்!

சென்னியம்மன் பேரு(ம்)இவள் கொண்டாள்! லக்‌ஷ்மி
...சேர்ந்தகண்ணும், வலது-‘சரஸ் வதி’யும் கொண்டாள்!
உன்னிவந்த  கலைஞர்க்கே பொருளும், கல்வி
...ஒப்பில்லா நலம்யாவும்  தந்த தாலே
 ‘சென்னியம்மா!’- எனப்பலரும் இவளைப் போற்ற
... ‘சென்னை’இதே எனநகர்ப்பேர் மாற லாச்சே!
கன்னியர்கள்  திருமணம்தான்  நடக்க வேண்டிக்
...கால்நடையாய்ச் சுற்றிவந்தால்  ‘அது’ந டக்கும்!

காலையிலே வாருங்கள்! நாத்தி கர்கள்
..கண்பனிக்க வேண்டுவரே! சிரித்தே அம்மா
பாலையுமே தான்கொடுத்துப் பலதும் ஈவாள்!
.. பதவிகளை இவளருளால் பெற்ற பேர்கள்
மாலைகொண்டு நெகிழ்ந்(து)அழுவார்! பார்த்துள் ளேனே!
.. மாயை,மன மாச்சர்யம் இவள்முன் நில்லா!
சூலம்தான் எதற்காகக் கையில் கொண்டாள்?
..சூறைபோல்  ‘மனம்’பெயர்க்க!.-. தெளிவீர்  நீரே!

Friday, December 28, 2012

ஒரு 'குறுக்கிய' மரத்தின் குலுங்கும் அழுகை

ஒரு 'குறுக்கிய' மரத்தின்('போன்ஸாய்''.ன்)குலுங்கும் அழுகை--
(நாட்டுப்பாடல்--கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)-

வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா?-சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா?- எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?
(*ஜப்பான் குள்ளன்)

அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா?-தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா?-அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா?-மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா?-என்ன
தெய்வக்'குத்தம்' செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா?-சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ-முறுக்கறேடா!
உன்நாத்த குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ?-ஏன்!
ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும்-மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ?-எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

'சைக்கோசெல்' திரவம்விட்டு மேலும் குறுக்கறே!-உன்
'சைக்கோத்'தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா!-பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ?-'மர'
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ?-அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது!-நீ
செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா?-மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?