கிளிஜோஸ்யம் பார்க்க வாருங்களேன்!!
***********************************09-11-25
(---வேதம்-)--(ஈறடித்தாழிசை-)_
கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக்
கிறுக்(கு) என்பர்;--விஞ்ஞானம்
வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை
இன்று! அது, மூட
நம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே
கெஞ்சுகிறேன்!
கும்பிடுவேன் உம்மைநான்!
கூண்டுவைத்துப் பிழைப்பவனைக்
கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம்
பாருமய்யா!
அருமையாய்க் குறிகேட்க அமருகிற
வேளையில்தான்,
'பறவை' அது ஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை!
குறிசொல்லி முடிந்தபின்தான், கொறிக்கிறது ஒரு- நெல்லை!
எங்கெல்லாம் கிளிக்கூண்டோ
அங்கெல்லாம் போம் அய்யா!
அங்கு போய்ப் பாரும் உமதிர்ஷ்டத்தை; இறைஞ்சுகிறேன்!
பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும்
தெரியாமல்
எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன்
எதிர்பார்க்கும்
வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப்
போல் மெலிந்திருக்கும்
பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே
போய்ப் பாரும்!
அடிக்கடி போனால், இறை அடியாரே
நீர் அன்றோ?
படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு
செய்வதினும்,
பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால்
சொர்க்கத்தின் இருகதவை ஒரேகையால்
திறக்கின்றீர்!!
******************************************************
No comments:
Post a Comment