Tuesday, April 28, 2015

சரணாலய அழகில் மயங்கி...

காலையில் முனகலாய் மதியம் சத்தமாய்
வேலை நிகர்த்த சொற்களாய்த் துளைக்க,..
காதைக் கிழிக்கும் சண்டையாய் முடிந்த
‘வேதனை தாம்பத்யம்’ நெஞ்சை வருத்த
மாலையில் கால்கள் தாமே பறவைச்
சோலைச் ‘சரணாலயம்’ நோக்கி இழுத்தன;
மனப்பறவை இறகுப் பறவைகளின் நாதத்தில்
மினுங்கி, முயங்கி, மகிழ்வுற,சாந்தமுற,
கொஞ்சம் கொஞ்சமாய்,-- குழப்பிய அந்த
வஞ்சச் சோக அலைகள் இயற்கையின்
அழகில் மொத்தமாய்க் கரைந்து போயின;
விழிகள், கவி-உள் அருவியோ டிணைந்தன;
எதிரே பார்க்கையில் விமானப் பாய்ச்சலாய்
முதிர்ந்த  புள்ஒன்று நீரை முட்டியதில்
உதிர்ந்தஓர் இறகின் வலியில் முனகி
பதமாய்க் கோதிப் படமாய்க் காட்டியது!
என்ன வேதனை? என்றே கேட்ட
வன்னத் துணையும் மருங்கில் அமர
இரண்டும் இப்போ நீண்ட மூக்கால்
உரசியே ஆகாயம் உற்றுப்பார்த்தன;
பெண்புள் கரிசனம் நெஞ்சைத்தொட்டது.
கண்ணால் பேசிய ஆணும் விழுங்கிய
மீனின் துணுக்கை ஊட்டி மகிழ்ந்தது;
வானிலும், புள்ளிலும் நிலவிய ஊடல்,
முடிந்தபின் கூடல் எனக்குஏன் இல்லை?
கடுமைதான் வாழ்க்கையா?கனிவிலா உறவா?
என்றே நினைக்கையில் எதிரே ஒரு-புள்
தன்அலகு திறந்து தளிர்நாக்கு நீட்டி,
எங்கோ அலைந்த தன்இணை அழைக்க
சங்கின் ஒலிபோல் நீரெலாம் அலை-அலை.!
இரண்டும் பரப்பில் இணைந்து கூடவும்
முறிந்தஎன் இரவுகள் மனத்தைப் பிசைந்ததே!
மீனே வேண்டாம் எனக்{கு}என் பதுபோல்
வீணே பறந்தஓர் புள்ளை மற்றவை
பார்த்துக் கலாய்க்க பட்டென ஒருமீன்
நேர்த்தியாய்த் துள்ளி வாய்க்குள் விழவும்,
புள்ளின் நாடகம் கண்டே அவைபோல்
துள்ளிஎன் கவிஉளம் தொடுத்தது சொற்களாய்!
பலப்பல வண்ணம்; பலப்பல ஆடல்;
சிலும்பிய காதல் சிறகுகள் நடனம்;
எல்லா அழகையும், இனியபல் அசைவையும்
பொல்லா மாலையின் பொழுதில் ரசித்தபின்,
எரியும் இரவை எண்ணியே திரும்பினேன்;
முறிந்ததோ இன்றைய நாளின் பரவசம்?
எனமனம் நொறுங்கும்; வாசலில் பார்த்தால்!..
 ‘என{து}இணை’ ..தளும்ப,.. இருகை அணைத்தே
வாரீர் விருந்தை உண்பீர்! வழங்குவீர்!
சோர்வே வேண்டாம்;சுகிப்போம் என்றதே!

No comments:

Post a Comment