Thursday, December 23, 2010

மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!

மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!
....வழியில் தீமையும் மேய்ந்து வரட்டுமே!
இனிப்பையும் கசப்பையும் ஊட்டி விடுங்களேன்!
....எதுதான் வலி(து)என அதுவே உணருமே!
சிங்கத்தை அங்குசம் கட்டுப் படுத்தாது!
....சிறுமுயல் நரியின் கண்ணுக்குத் தப்பாது!
தங்கத்தில் நகையும் அணியணும் என்றால்,
....தணலிலே வாட்டணும்,தண்ணீரும் காட்டணும்!1
(வேறு)
ஓடிக்கொண் டேஇருக்கும் எண்ணத் தால்தான்
....உரம்பெறுமே நம்மனம்தான்!எண்ணிப் பாரீர்!
தேடிக்கொண் டேஇருக்கும் ஆசை கூட
....தினம்தினமும் வரும்எண்ணம் திடமாய் ஆனால்,
வாடிக்கொண் டேஇருக்கும் நெஞ்சம் ஓர்நாள்
....வளர்ந்துபற்றும்!தெய்வஅருள் வெற்றி சேர்க்கும்!
நாடிக்கொண் டே இருக்கும் ஆன்மத் தேடல்
....நல்லதொரு தியானத்தில் ‘ஒளியை’ப் பார்க்கும்!
எனவேதான் மனம்போகும் போக்கை நீவிர்
....இறுக்கிக்கட் டாதீர்கள்!”....மகான்கள் சொன்னார்!
தனியாக அஃதுஎங்கோ சுற்றிப் பின்பு
....தானாக நம்வசத்தில் வந்து சேரும்!
நுனிக்காம்பு காய்பற்றல் போல்அ ணைத்தே
....நொடிஎல்லாம்  ‘ஒளி’ என்றே பார்க்கச் செய்வீர்!
கனியாதோ  வேளைவந்தால் காயும் கூடி?
....காய்’ என்றே நும்மனத்தைக் காய்ச்சா  தீர்கள்!!
கறைநிலவும் வானத்தில் ஒளியை வீசும்!
....காடுநின்ற மரமும்நம்  கூடம் ஏறும்!
குறைசொன்ன கண்ணகியும் தெய்வம் ஆனாள்!
....கூனியினால் ராமன்கதை மாறிப் போச்சே!
வரிவரியாய், அலைஅலையாய் மனம்போ னாலும்
....மகான்சரிதம் பற்றிநின்றால் அடங்கி நிற்கும்!
அருவிக்கும் ஓரிடத்தில்  ‘சாந்தி’ உண்டே!
....அமைதிஉற்ற மனத்திற்கும் ‘காந்தி’.. உண்டு!
(வேறு)
ஆம்!
கரம்பு நிலத்தை உழுது வெற்றி
....கண்டு மகிழும் இந்த ‘மனம்’!
அருண கிரியின் லீலை’ ஒடுக்கி
....அருளாய் மாற்றிய திந்த மனம்!
மனமே உன்னைநீ நம்பி னாலே
....வாழ்வும் உயர்வாய் மாறிவிடும்!
தினமும் எண்ணச் சுழலில் இருந்தும்
....தெளிந்தால் அமுதம் வரவாகும்!
 
பயணம் போகா மனத்தி னாலே
....பாதை சுருங்கிப் போய்விடுமே!
குயவன் பிசைந்த கடின மண்ணும்
....கொலுவில்  வருமே! உணர்ந்துநிற்பாயே!
(முடிவாக)-
மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!
....வழியிலே நன்மையைக் கண்டு மகிழுமே!
தியானத்தில் நில்லுங்கள்! தேவனாய் மாறலாம்!
....தினமும் பிறர்க்கே நன்மை செய்யலாம்!

No comments:

Post a Comment