Monday, December 27, 2010

தங்கச்சிப் பாப்பா

என்னையும் அடிப்பார் அப்பா!
..என்தாயும் அடிக்குத் தப்பாள்!
கன்றுபோல் துள்ளும் பாப்பா
..கடிந்த ‘சொல்’ கூட வாங்காள்! 

இன்றுடன் வயதி ரண்டாம்!
...இவளேஎன் தங்கைப் பாப்பா!
பின்னேஓர் வால்தான் இல்லை
...பீமன்போல் விஷமக் குண்டு!
தேவிபோல் வளைய வந்தாள்! 
..தெருவுளோர் கொஞ்ச வந்தார்!
பூவைப்போல் சொகுசுக் கையால்
..பூஜைப்பூ இறைத்தி ளிப்பாள்!

நாவினால் சின்னத் திட்டும்
..நாங்களும் செய்த தில்லை!! 
தூவுவாள் மணலை என்மேல்!
..துளிச்சினமும் கொண்ட தில்லை!!  
பாய்ந்துஓ! குதிப்பாள்! ஓயாள்!
..பணிந்ததாய் வேட மிட்டுச், 
சாய்குவாள் அப்பா வின்மேல்! 
..தந்தையும் கொஞ்சி நிற்பார்!

பாய்ந்(து)என்றன் பாட நூல்நான்
..பதைத்திடக் கிழிப்பாள் ;ஏனோ 
சாய்ந்தனள் விஷச்சு ரத்தால்!
....சரியாக யமன்மேல் கோபம்!!
எத்தனை ஊசி இட்டார்!!
..எத்தனை  மருந்து வாய்க்குள்!
சொத்(து)அனை பாப்பா கொண்டு  -  
..சூரன்போல்  ‘அவன்’சி ரித்தான்!

குத்தினோம்  “கந்த” னையே!!
..கும்பிட்டும் உதவ லையே!!
எத்தனைப் பணமி ருந்தும்
.எமனுமே மசிய லையே!!

No comments:

Post a Comment