கவிகேட்டால் நம்தலை, கண்யாவும் சுற்றும்!
சுவைரசித்த சொர்க்கமாய்ச் சொக்கும்!-அவன்பாட்டைத்
தெம்புடனே பாடிடிலோ தேன்சொட்டும்! மெய்அய்யா!
கம்பன் கவியே கவி!
விதம்விதமாய்ச் சந்தமதில் வேண்டுமட்டும் பாடி
இதமாகப் பக்திக்குள் ஈர்த்தான்!--சுதிகூட்டி
உம்பரும் ‘ராமகுணம்’ ஓர்ந்தே புகழவைத்த
கம்பன்கவியே கவி!....(2)
"விவேகம் இராமனின்சொல்! மெல்லியள்சீ தையை
அவாவும் இராமநெஞ்(சு) அழகு!"--சுவைபட
நம்புவண்ணம் தேன்கவியில் நம்முன்(பு) ' இதைச்'சொன்ன
கம்பன் கவியே கவி!..(3)
கவிஅழகில் சொக்குவமா?காவியந டையின்
சுவையை வியப்போமா?சூரன்--புவியாண்ட
நம்ராமன் வில்வேகம் நாட்டியதைப் போற்றுவமா?
கம்பன் கவியே கவி!..(4)
விண்டுரைப்பான் தூங்கா வியன்தொண் டிலக்குவனை!
‘கண்டு’போல் சூர்ப்பநகை காதையும்!--கொண்டநன்றிக்
கும்பகர்ணன் பாட்டில் குவலயமே விம்முமய்யா!
கம்பன் கவியே கவி!...(5)
விம்மிதமாய்க் கூறித் தமிழ்க்கற்பை மேலுயர்த்த
“எம்அ(ன்)*னையை மண்ணோ டெடுத்தானே!-விம்மியழும்
நம்தேவி யைஅரக்கன்”- என்றே ’நயம்’உரைத்த
கம்பன் கவியே கவி!...(6)
.........(*இடைக்குறை எனக்கொள்க)-
வித்தைபோல் கற்பனைகள்!வீசிவரும் புத்துவமை!
சொத்துப்போல் பாத்திரத் துல்லியம்!--இத்தனையும்
கும்பமுனி காவிரியைக் கொட்டினன்போல் கொட்டினனே!
கம்பன் கவியே கவி!..(7)
(மாற்றுநடை)
விஞ்சிநின்றீர் அன்பிலே! வீரர் பலரை’வள்ளல்’
கொஞ்சியே தம்பி!எனக் கூவவைத்தீர்!!-துஞ்சாத
நும்பாட்டால் அப்‘பரதன்’ ஞானியென்றீர்! சொல்வேன்யான்,
‘கம்பன் கவியே கவி!.’..(8)
கவித்துவத்தில் வானுயர்ந்தீர்!! கைகேயி சொல்லே
புவியில் அரக்கரெலாம் பொன்றச் -சுவையான
தெம்புதந்த ‘காரணம்’ என்றீர்!யாம் தேர்ந்துசொன்னோம்,
“கம்பன் கவியே கவி!.”(9)
வியன்கவியே! கம்பரே!! மேனிசி லிர்க்கும்
அயன்சொற்கள் யுத்தகாண் டத்தில்!--வியக்கின்றேன்!
நும்படைப்பே ‘சித்து’என்று நூறு முறைநுவல்வேன்!--
“கம்பன் கவியே கவி!”
No comments:
Post a Comment