Monday, December 27, 2010

சரணாகதி

சரணாகதிப் பெருமை சம்சாரி நாமறிவோம்!(சன்யாசி அறிவானா?)
சரணாகதித் தத்துவம் நாம் அறியாமல் இருந்தால்
இரவு,பகல் உணவு ஒழுங்காய் இல்லறத்தாள் தருவாளா?
முறைப்பது அவள்உரிமை! முனகாமல் எதிர்க்காமல்(நாம்)
சரண்டர் ஆனால்தான் சகலமும் கிட்டும் அன்றோ?
முறையாய்இத் தத்துவம் இல்லறத்தில் இருந்தேதான்
போர்க்களத் திற்கும் அரசியலுக்கும் போனதென்பேன்!
.(பசங்களிடமும் நாம் சரண்டர்!)ஆம்!
கார்த்தாலே பிள்ளையை எழுப்பியபின்,குளிக்கவைத்தால்,
போர்க்கோலம் செய்து,அவன் போகேன்பள்ளி என்றால்,
முகவாய் தடவி முன்னூறு முத்தம்தந்து,
அவனைப் பள்ளிக்கு அனுப்பும் "தாஜா' வகையே
சரணாகதிக் கொள்கைக்கு "சத்த"மான பொருள் என்பேன்!
திருமணப்புதிதில்,
அறுபதுநாள் மோகத்தில் "ஆமாம் ஆமாம்" போடுவது
சரண்டர் பாலிஸியின் சரியான முதல்விதி!
அறுபது கடந்தபின் அவளுக்கு அடிமைஎனல்
சரண்டரின் விதிகடந்த கிழவரின் தலைவிதி!
இது குடும்ப"சரண்' அகராதி_
இராமனையே நன்கறிந்த இராக்கதன் விபீஷணன்
இராவணன் தோற்றபின் இலங்கை அழிந்திடுமே,
என்ற-ஒரு பயத்தால்தான் இராமனைச் சரணடைந்தான்!
இன்று இவனுக்கு அபயம் அளிக்காதீர்! என்றுபல
குரங்குகளும்,சுக்ரீவனும், இலக்குவனும் எதிர்த்தபினும்
அருமை'இஷ் வாகுவீரன் அவர்கட்குச் சொன்னானே!
.
"சரண்'என்றே வந்தவற்கு சரியென் றதுதந்து,
முறையாகத் தழுவி முழு அபயம் கொடுப்பதே
..
என்போன்ற வீரற்கு இஷ்வாகு குலத்திற்குப்
பொன்'அழகு! எதுவரினும் பூரணமாய் எதிர்த்துநிற்பேன்!
..
இவனுக்கு இப்போதே இலங்கைமன்னன் என்றுபட்டம்
சுவைபடச் சூட்டு"இலக்குவா!'என்று பணித்தானே!
..
அந்த'இராமன் தந்துநின்ற அபயத்தி லிருந்துதான்
இந்த'சர ணாகதி'ச்சொல் இங்கிதமாய் வந்ததென்பேன்!
..
ஆண்டாளின் பாடல்களும்,,ஆழ்வார்கள் பாசுரமும்
"ஆண்டவா!நான் உன் அடிமை! அடியேனை ஆட்கொள்வாய்!".
..
என்று"சரண்' தத்துவத்தை எழிலுடனே விளக்கிநிற்கும்;
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கேநாம் ஆட்செய்வோம்"
.
என்றே சரணடைந்து எம்பெருமான் உடன்கலந்து
அன்றே சரணாகதிப்  பெருமையை உணர்த்தலையா?
..
ஆழ்வார்கள் தம்மை நாயகியாய்ப் பாவித்து(த்தான்)
வாழ்விக்கும் பெருமாளை நாயகனாய்ப் பாவித்தார்!
..
ஆண்டாளோ உடம்பாலும் நாயகியாய் இருந்தாளே!
ஆண்டவ னைப்பாடி அப்படியே கலந்தாளே!
..
இதைவிட சரணாகதிப் பெருமை'எவ் வாறுசொல்வேன்? 
சதை'அறுத்துச் சரண்'பெருமை தந்த'சிபி கதைசொல்வேன்!
..
சிபி'என்ற  பேரரசன் சிறிய'புறா சரண்எனச்
சபைநடுவே வந்துவிழ, சட்டென அவன்தூக்க,
என்உணவு அது' என்றே பெரும்கழுகு வாதுசொல்ல,
தன்சதையை அறுத்தானே, தளராது கொடுத்தானே!
..
அந்தசிபி அன்றோ சரண்'ரூப மாய்நின்றான்!
நந்தம் இராமனினும் நால்மடங்கு உயர்ந்துவிட்டான்!!
..
தியாகராஜரின் "துடுகுகல"(கௌளராகக்) கீர்த்தனை கேட்டிருப்பீர்!
தியாகம் செய்தஅவர் தமக்காகவா, 'அபயம்' கேட்டார்?
.
நமக்காக அன்றோநம் பிரானிடம் சரண்'கேட்டார்?(அதைத் தமிழில் சொல்வேன்)
(வினையிலழுந்தும் மானுடம் மேன்மைபெறப் பிரார்த்தனைஅது)
துடுக்குகள் புரியுமென்னை தூயவனே காப்பீரோ?
பிறர்தனம் கோரி வயிறுநிரப்பித் திரிந்தேனே!
.
ஊழ்வினைப் புவியில் சௌக்கிய ஜீவனமே
வாழ்வுஎன ஸதாதினம் கழித்தேனே ராமா!
பெண்டிற்குச் சிலகாலம்,மண்ணிற்குச் சிலகாலமெனப்
பணம்திரட்டிப் புவியில் அலைந்தேனே இப்பாவி!
த்யாகராஜ நேசனே எனைநீ காப்பாயோ?
..
என்றழுதே விதவிதமாய் எம்பிரானை எவ்வாறு
சரண் அடைவதென்னும் "சங்கதிகள்' தந்தாரே!
பழியெல்லாம் நமக்காக ஏற்று"க்ருதி' நெய்தாரே!
அதேபோல் ,
 நாயன்மாரும்"நாமார்க்கும் குடியல்லோம்,மீளா ஆளாய்க் கோமார்க்கே சரணானோம்
என்றும்,அன்னே! நின்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே!.என்றும்,
சிவனே உன் அபயம் நானே!
..என்றெல்லாம் நமக்காய்ச் "சரண்'பாடி இறைகலந்தார்!

சோதிக்கநேர் வந்தசிவன் சோதியிலே கலந்துகொண்டார்!
..
சகல எதிர்ப்பினையும் "சரணாகதி' ஒன்றால் வெற்றிகண்ட
மகான்களைப் பாடியே மனதைச் 'சரண்' கொடுத்துவிட்டேன்!
..
வாழ்க சரணாகதித் தத்துவம்! வாழ்க ஆழ்வார்கள்!

1 comment:

  1. நமக்காக தத்துவம் விருந்து (உணவு சரணாகதித)நாமறிவோம்.

    ReplyDelete