Monday, December 27, 2010

நிலமெனும் பஞ்சபூதம்

நங்கைநான் நீங்கள் நினைப்பதுபோல்
பலம்மிக்க தாயன்று..பதறாதீர், சொல்கின்றேன்!
உள்ளுக்குள் தீக்குழம்பும் ஓயாது கடல்உப்பும்
பள்ளத்தில் வீழ்த்தும்;உம், பாதகங்கள்,அச்சுறுத்தும்
என்கையிலே, எப்படிநான் இறுகுநிலை எய்தியவள்
என்றே நினைப்பீர்கள்?என்கவலை நீரறியீர் !
ஒருபக்கம் ஓயாமல் அணுகுண்டை வீசுகிறீர்;
கிறுகிறுத்துப் போய்நான் கிளர்ச்சியும்,மனஉளைச்சல்
அடைந்தும்யான் பதறிஒரே அனல்மூச்சை வெளியிட்டால்
வெடவெடத்துத் திட்டுகின்றீர்!எரிகுழம்பை வீசுகிறாள்
நிலமாம்தாய் என்றேநீர் நீள்கவிதை படிக்கின்றீர்!
கலகலப்பாய் உங்களையான் காத்திடவே மலைகளையும்,
பாறையையும் என்வயிற்றில் பத்திரமாய் வைத்தபின்தான்
பாறைமனங் கொண்டஉம்மைப் பொறுமையுடன் தாங்குகின்றேன்.
பசியமரம்,பயிர்பச்சை இவையெல்லாம் பலப்படுத்தும்
நிசமான காப்பு,என்று நீவிர் அறிந்தாலும்,
வயல்வெட்டி,நிலம்தோண்டி மனைகளாய் மாற்றுகின்றீர்;
பயனில்லாக் காசுக்காய்ப் பதர்களாய் மாறுகின்றீர்!
பயிரழித்தே என்குழந்தை யானைக்கும் உணவின்றி,
உயிர்மாய்த்துப் பாதகம்நீர் செய்தால் உளம்மாய்ந்தே,
என்கண்ணீர் சொரிந்துவிட்டால், ஏன்அதை 'சுநாமீ'
என்றுசொல்லி ஏராளம் ஏசுகின்றீர்? யார்குற்றம்?
கருசுமக்கும் தாயின்மேல் கடும்காயம் விளைத்துநின்றால்
கருணைத்தாய் பொறுக்கணுமா? கண்ணீரும் அடக்கணுமா?
அணுவெடிச் சோதனைக்கே அடியாள்யான் பலிகடாவா?
அணைகட்டி என்வயிற்றை அனல்காய வைக்கின்றீர்!
மரம்வெட்டி என்நரம்பை மலடாக்கிப் போடுகின்றீர்!
சுரம்வரும் அளவுக்குக் காட்டில்தீ வைக்கின்றீர்!
மண்என்னும் ஜாலத்தை மழுங்கடித்தே பாலைவனப்
புண்ஆக்கி மகிழ்கின்றீர்!நச்சுவாயு கலந்தே
மாசுகளை ஆற்றிலெல்லாம் மனமாரக் கொட்டிநின்றால்
ஆசுகவி உம்மேலே அற்புதமாய்ப் பாடுவனோ?
குழந்தைகள் எனப்பொறுத்தால் கோட்டானாய் மாறிநின்றே
அழிவையே நாடுகின்றீர்!அதனால்தான் உ(ம்)மைத்திருத்த
வெள்ளமென்று நீர்த்தேவன் துணைகொண்டே வீறுகின்றேன்!
கள்ளமிலை (என்)அறிவுரையில்!வெளிப்படையாய்க் கழல்கின்றேன்!
காளிக்கு(ஏன்) ஆயிரம்கை எனஒன்றை நீர்வெட்டின்,
காளிகைச் சூலம்உம்மைக் கவனமாய்ப் பார்க்காதோ?
ஆதிசேடன் ஒன்றுக்கு ஆயிரம் தலைகள்ஏன்?
பாதிதலை வெட்டிநாம் பஸ்பம் தயாரிப்போம்
எனநீங்கள் வணிகராய் இப்போது மாறிநின்றால்,
தனைத்தாங்கும் அதன்தலைவர் சாய்ந்துகொண்டே இருப்பாரா?
சிந்தனை செய்யஏன் 'காசுக்காய்' மறுக்கின்றீர்?
வந்தனை செய்யஅன்றோ ஆறுகட்கே மங்கைபேர்
வைத்தார்கள்!மணல்வெட்டி என்வயிற்றில் அடிப்பீரேல்
கைத்தாளம் போட்டேயான் காம்போதி பாடுவேனோ?
வன்முறையை வளர்த்தேநீர் மாசறுஎன் உயிர்களையே
கொன்றால்யான் ககனகுதூ கலத்தில் வாழ்த்துவனோ?
குப்பைகளை என்னுடம்பில் குஷியாய்நீர் கொட்டிநின்றால்
தப்பட்டை வாசித்துத் தனிநடனம் ஆடுவனோ?
ஆதலினால் நிலமென்னும் அசட்டு மெல்லியலாள்
பாதகங்கள் பொறுத்துநிற்கும் பலமில்லாக் கருணைத்தாய்
என்றினிமேல் குழந்தைகளே! இழிவுச்செ யல்செயற்க!
கன்றுகளும் தம்வாலால் கனஅடிகள் தரமுடியும்!

No comments:

Post a Comment