Thursday, December 23, 2010

வேல்முருகன் தினம்தரும் விருந்து!

வேல்விழியாள் எனைச்சாய்க்க வழிகண்டாள்!-கண்ணில்
....வேலைஇவள் கொண்டன்றோ வெற்றிகொண்டாள்”-என்று
சூல்பிடித்த  அறிவாலே முருகாநீ கண்டாய்!- 
....சூரனையே சாய்த்திடஅவ் வேல்கையில் கொண்டாய்!
கால்பிடித்த என்வினையை விரட்டிடவே வேலா! 
....கணநேரம் பயன்படுத்து! கெஞ்சுகின்றேன் முருகா!
நூல்பிடித்துத்  தொடுத்தஉடை மேனியதன் மானம் 
....நொடிதோறும் காப்பதுபோல் அருளென்மேல் தொடுப்பாய்! (1)
என்விழிக்குள் உன்விழியைப் பொருத்திடுவாய் முருகா!
....என்அன்பால் உன்தோளைப் புல்லிநின்றேன் கந்தா!
என்கரத்துள் உன்ஒருகை சக்தியினைக் கோப்பாய்!
....எத்தனையோ சந்தமதால் உனைத்தொழுதேன் வேலா! 
உன்அருளை என்அகத்துள் கூட்டக்-கா ணிக்கை 
....ஒருபோதும் நீகேளாய்! அறிவேனே முருகா!
மின்னலது முகில்இணைக்க,-மழைஒன்று மண்ணில்
....மேவிஒரு கருணைசெய்யக் காணிக்கை உண்டோ? (3)
ஏந்திநின்றாய் ஒருகோலை! விழவைத்தாய் தாளில்!
....இயக்குகின்றாய் அண்டத்தை! உறைந்தாய்-நெஞ் சத்தில்!
வேந்தனைப்போல் அடியார்முன் ஆணைகளி டாமல் 
....மேவிநின்றே ஏவல்செய்தாய்!...-அன்பர்காள் பாரீர்!
சாந்தமெனச் சந்தனத்தால் முகம்பூசி மகிழ்வைச்
....சந்ததமும் காட்டுகின்ற என்னவனைப் பணிவீர்!
காந்தமென்றே அறிவீர்நீர் அவன்விழியை! ...- பாரீர்! 
....கருணைகண்டு மெழுகெனவே உருகித்தாள் சேர்வீர்!
11-11-10

No comments:

Post a Comment