Monday, December 27, 2010

அறிமுகம்..

கவியோகி வேதத்தின் கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் விவரம்:-

1)- காயத்ரியின் காதல்..(போட்டியில் முதற்பரிசு பெற்ற குறுங்காவியக் கவியும் பிறவும்)--சொந்தப் பிரசுரம்-ஜூன்1981-இல்

2)-எளிய யோகாசன முறைகள்-(சமூகநலனுக்காக பலர் வேண்ட,நூல் ஆக்கப்பட்டது)-Publisher-புத்தகப் பூங்கா-டிஸம்பர் 1983(35000 பிரதிகள் விற்பனையாயின)

3)-வள்ளல் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர்--(this is about Sree kaanchi Mahap periyavaaL-)பப்ளிஷர்- ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயம், சென்னை-41நவம்பர்-2003.

4)-கவியோகி கவிதைகள்
Published in Dec2007--by LKM publications, T Nagar, Chennai-17

5)-போகமும் யோகமும்-(Essays on Bakthi Literature as to What is Bhoga and what is Yoga)- by LKM publications , Chennai-17 in March 2009

6)-தியானமும் யோகாசனமும்-- (Essays on Meditation and Asanas) Published for doing good to Whole HUmanity, by LKM publication, Chennai-17...in June 2010

இவரது இலக்கியச் சேவைகள் + பங்களிப்புகள்;-

1) 1966 இலிருந்து இதுவரை தமிழ் இலக்கிய உலகில் 600க்கும் மேற்பட்ட கவியரங்கம்,பட்டிமன்றம்,தனிப்பேச்சுக்கள் நிகழ்த்தியுள்ளார் இவர்..

2)- மேலும் இதுவரை கல்கி, ஆநந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் 250க்கும் மேல் இவரது கவிதைகள்+ பாரதி பற்றிய பற்பல கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன..

3)-சமீபத்தில் 2008இல்(ஆகஸ்ட்) கானடாவில்(Massachussets)- ‘சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்’என்னும் தலைப்பில் 1 மணி நேரத்திற்கும் மேல் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்..

4)-சிங்கப்பூரில் பிப்ரவரி 2008-இல் சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும் பற்றி ஒன்றரை மணி நேரம் பேச்சு நிகழ்த்தியுள்ளார்.

5)-இவை தவிர 1996 இலிருந்து(ரிசர்வ் வங்கியில் ஓய்வு பெற்றபின்)தொடர்ச்சியாக இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார். சமுதாயத்தில் அனைவருமே தான் யார்? உலகிற்கு என்ன காரணத்திற்காகப் பிறப்பு எடுத்தோம் என்பதை ஒவ்வொருவரையும் உணரச்செய்வதற்காகவே தீவிர மனப்பயிற்சி கொடுத்துவருகின்றேன் என்பார் இந்த பூரண யோகியார். ..

யோகியார் என்னும் பெயரில் இதுவரை பற்பல கவிதைகள், யோகா ஆலோசனைகளை தமிழ் இணையங்களில் எழுதிவரும் இவரது சமுதாய சேவைகளைஎவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சரணாகதி

சரணாகதிப் பெருமை சம்சாரி நாமறிவோம்!(சன்யாசி அறிவானா?)
சரணாகதித் தத்துவம் நாம் அறியாமல் இருந்தால்
இரவு,பகல் உணவு ஒழுங்காய் இல்லறத்தாள் தருவாளா?
முறைப்பது அவள்உரிமை! முனகாமல் எதிர்க்காமல்(நாம்)
சரண்டர் ஆனால்தான் சகலமும் கிட்டும் அன்றோ?
முறையாய்இத் தத்துவம் இல்லறத்தில் இருந்தேதான்
போர்க்களத் திற்கும் அரசியலுக்கும் போனதென்பேன்!
.(பசங்களிடமும் நாம் சரண்டர்!)ஆம்!
கார்த்தாலே பிள்ளையை எழுப்பியபின்,குளிக்கவைத்தால்,
போர்க்கோலம் செய்து,அவன் போகேன்பள்ளி என்றால்,
முகவாய் தடவி முன்னூறு முத்தம்தந்து,
அவனைப் பள்ளிக்கு அனுப்பும் "தாஜா' வகையே
சரணாகதிக் கொள்கைக்கு "சத்த"மான பொருள் என்பேன்!
திருமணப்புதிதில்,
அறுபதுநாள் மோகத்தில் "ஆமாம் ஆமாம்" போடுவது
சரண்டர் பாலிஸியின் சரியான முதல்விதி!
அறுபது கடந்தபின் அவளுக்கு அடிமைஎனல்
சரண்டரின் விதிகடந்த கிழவரின் தலைவிதி!
இது குடும்ப"சரண்' அகராதி_
இராமனையே நன்கறிந்த இராக்கதன் விபீஷணன்
இராவணன் தோற்றபின் இலங்கை அழிந்திடுமே,
என்ற-ஒரு பயத்தால்தான் இராமனைச் சரணடைந்தான்!
இன்று இவனுக்கு அபயம் அளிக்காதீர்! என்றுபல
குரங்குகளும்,சுக்ரீவனும், இலக்குவனும் எதிர்த்தபினும்
அருமை'இஷ் வாகுவீரன் அவர்கட்குச் சொன்னானே!
.
"சரண்'என்றே வந்தவற்கு சரியென் றதுதந்து,
முறையாகத் தழுவி முழு அபயம் கொடுப்பதே
..
என்போன்ற வீரற்கு இஷ்வாகு குலத்திற்குப்
பொன்'அழகு! எதுவரினும் பூரணமாய் எதிர்த்துநிற்பேன்!
..
இவனுக்கு இப்போதே இலங்கைமன்னன் என்றுபட்டம்
சுவைபடச் சூட்டு"இலக்குவா!'என்று பணித்தானே!
..
அந்த'இராமன் தந்துநின்ற அபயத்தி லிருந்துதான்
இந்த'சர ணாகதி'ச்சொல் இங்கிதமாய் வந்ததென்பேன்!
..
ஆண்டாளின் பாடல்களும்,,ஆழ்வார்கள் பாசுரமும்
"ஆண்டவா!நான் உன் அடிமை! அடியேனை ஆட்கொள்வாய்!".
..
என்று"சரண்' தத்துவத்தை எழிலுடனே விளக்கிநிற்கும்;
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கேநாம் ஆட்செய்வோம்"
.
என்றே சரணடைந்து எம்பெருமான் உடன்கலந்து
அன்றே சரணாகதிப்  பெருமையை உணர்த்தலையா?
..
ஆழ்வார்கள் தம்மை நாயகியாய்ப் பாவித்து(த்தான்)
வாழ்விக்கும் பெருமாளை நாயகனாய்ப் பாவித்தார்!
..
ஆண்டாளோ உடம்பாலும் நாயகியாய் இருந்தாளே!
ஆண்டவ னைப்பாடி அப்படியே கலந்தாளே!
..
இதைவிட சரணாகதிப் பெருமை'எவ் வாறுசொல்வேன்? 
சதை'அறுத்துச் சரண்'பெருமை தந்த'சிபி கதைசொல்வேன்!
..
சிபி'என்ற  பேரரசன் சிறிய'புறா சரண்எனச்
சபைநடுவே வந்துவிழ, சட்டென அவன்தூக்க,
என்உணவு அது' என்றே பெரும்கழுகு வாதுசொல்ல,
தன்சதையை அறுத்தானே, தளராது கொடுத்தானே!
..
அந்தசிபி அன்றோ சரண்'ரூப மாய்நின்றான்!
நந்தம் இராமனினும் நால்மடங்கு உயர்ந்துவிட்டான்!!
..
தியாகராஜரின் "துடுகுகல"(கௌளராகக்) கீர்த்தனை கேட்டிருப்பீர்!
தியாகம் செய்தஅவர் தமக்காகவா, 'அபயம்' கேட்டார்?
.
நமக்காக அன்றோநம் பிரானிடம் சரண்'கேட்டார்?(அதைத் தமிழில் சொல்வேன்)
(வினையிலழுந்தும் மானுடம் மேன்மைபெறப் பிரார்த்தனைஅது)
துடுக்குகள் புரியுமென்னை தூயவனே காப்பீரோ?
பிறர்தனம் கோரி வயிறுநிரப்பித் திரிந்தேனே!
.
ஊழ்வினைப் புவியில் சௌக்கிய ஜீவனமே
வாழ்வுஎன ஸதாதினம் கழித்தேனே ராமா!
பெண்டிற்குச் சிலகாலம்,மண்ணிற்குச் சிலகாலமெனப்
பணம்திரட்டிப் புவியில் அலைந்தேனே இப்பாவி!
த்யாகராஜ நேசனே எனைநீ காப்பாயோ?
..
என்றழுதே விதவிதமாய் எம்பிரானை எவ்வாறு
சரண் அடைவதென்னும் "சங்கதிகள்' தந்தாரே!
பழியெல்லாம் நமக்காக ஏற்று"க்ருதி' நெய்தாரே!
அதேபோல் ,
 நாயன்மாரும்"நாமார்க்கும் குடியல்லோம்,மீளா ஆளாய்க் கோமார்க்கே சரணானோம்
என்றும்,அன்னே! நின்னையல்லால் வேறு யாரை நினைக்கேனே!.என்றும்,
சிவனே உன் அபயம் நானே!
..என்றெல்லாம் நமக்காய்ச் "சரண்'பாடி இறைகலந்தார்!

சோதிக்கநேர் வந்தசிவன் சோதியிலே கலந்துகொண்டார்!
..
சகல எதிர்ப்பினையும் "சரணாகதி' ஒன்றால் வெற்றிகண்ட
மகான்களைப் பாடியே மனதைச் 'சரண்' கொடுத்துவிட்டேன்!
..
வாழ்க சரணாகதித் தத்துவம்! வாழ்க ஆழ்வார்கள்!

சின்னச் சின்ன சுகம் எனினும்..

புதிய தோட்டம்!..உலவுகின்றேன்;-வேப்பம் 
...பூக்கள் என்மேல் உதிர்கையிலே
விதியை மாற்றும் ‘சக்தி’ என்னுள்-தூவும்
...வெற்றி என்றே உணர்கின்றேன்!
நதியின் ஓரம் நடக்கையிலே,-குளிர்
...நடுக்கி உடம்பு சிலிர்க்கையிலே
புதிதாய்க் கவிதை கனன்றுவந்து-சூடு
..புணர்தல் ரசித்து மகிழ்கின்றேன்!
காட்டில் பசியால் மயங்குகையில்--ஒற்றைக்
..கருப்புக் குயிலின் கூவலிலே
மீட்டும் உணர்ச்சி பொங்கிவர,--என்
..மீண்ட சொர்க்கம் கண்டுகொண்டேன்!
நீண்ட வாழ்க்கை  வெம்மையிலே--அமுதம்
 ..நெஞ்சில்  ‘சொட்டும்” காட்சி இவை!
தீண்டும் ”சக்தி”க் கைபட்டால்--எந்தச்
... சின்ன சுகமும் இனிக்காதோ??

தங்கச்சிப் பாப்பா

என்னையும் அடிப்பார் அப்பா!
..என்தாயும் அடிக்குத் தப்பாள்!
கன்றுபோல் துள்ளும் பாப்பா
..கடிந்த ‘சொல்’ கூட வாங்காள்! 

இன்றுடன் வயதி ரண்டாம்!
...இவளேஎன் தங்கைப் பாப்பா!
பின்னேஓர் வால்தான் இல்லை
...பீமன்போல் விஷமக் குண்டு!
தேவிபோல் வளைய வந்தாள்! 
..தெருவுளோர் கொஞ்ச வந்தார்!
பூவைப்போல் சொகுசுக் கையால்
..பூஜைப்பூ இறைத்தி ளிப்பாள்!

நாவினால் சின்னத் திட்டும்
..நாங்களும் செய்த தில்லை!! 
தூவுவாள் மணலை என்மேல்!
..துளிச்சினமும் கொண்ட தில்லை!!  
பாய்ந்துஓ! குதிப்பாள்! ஓயாள்!
..பணிந்ததாய் வேட மிட்டுச், 
சாய்குவாள் அப்பா வின்மேல்! 
..தந்தையும் கொஞ்சி நிற்பார்!

பாய்ந்(து)என்றன் பாட நூல்நான்
..பதைத்திடக் கிழிப்பாள் ;ஏனோ 
சாய்ந்தனள் விஷச்சு ரத்தால்!
....சரியாக யமன்மேல் கோபம்!!
எத்தனை ஊசி இட்டார்!!
..எத்தனை  மருந்து வாய்க்குள்!
சொத்(து)அனை பாப்பா கொண்டு  -  
..சூரன்போல்  ‘அவன்’சி ரித்தான்!

குத்தினோம்  “கந்த” னையே!!
..கும்பிட்டும் உதவ லையே!!
எத்தனைப் பணமி ருந்தும்
.எமனுமே மசிய லையே!!

நிலமெனும் பஞ்சபூதம்

நங்கைநான் நீங்கள் நினைப்பதுபோல்
பலம்மிக்க தாயன்று..பதறாதீர், சொல்கின்றேன்!
உள்ளுக்குள் தீக்குழம்பும் ஓயாது கடல்உப்பும்
பள்ளத்தில் வீழ்த்தும்;உம், பாதகங்கள்,அச்சுறுத்தும்
என்கையிலே, எப்படிநான் இறுகுநிலை எய்தியவள்
என்றே நினைப்பீர்கள்?என்கவலை நீரறியீர் !
ஒருபக்கம் ஓயாமல் அணுகுண்டை வீசுகிறீர்;
கிறுகிறுத்துப் போய்நான் கிளர்ச்சியும்,மனஉளைச்சல்
அடைந்தும்யான் பதறிஒரே அனல்மூச்சை வெளியிட்டால்
வெடவெடத்துத் திட்டுகின்றீர்!எரிகுழம்பை வீசுகிறாள்
நிலமாம்தாய் என்றேநீர் நீள்கவிதை படிக்கின்றீர்!
கலகலப்பாய் உங்களையான் காத்திடவே மலைகளையும்,
பாறையையும் என்வயிற்றில் பத்திரமாய் வைத்தபின்தான்
பாறைமனங் கொண்டஉம்மைப் பொறுமையுடன் தாங்குகின்றேன்.
பசியமரம்,பயிர்பச்சை இவையெல்லாம் பலப்படுத்தும்
நிசமான காப்பு,என்று நீவிர் அறிந்தாலும்,
வயல்வெட்டி,நிலம்தோண்டி மனைகளாய் மாற்றுகின்றீர்;
பயனில்லாக் காசுக்காய்ப் பதர்களாய் மாறுகின்றீர்!
பயிரழித்தே என்குழந்தை யானைக்கும் உணவின்றி,
உயிர்மாய்த்துப் பாதகம்நீர் செய்தால் உளம்மாய்ந்தே,
என்கண்ணீர் சொரிந்துவிட்டால், ஏன்அதை 'சுநாமீ'
என்றுசொல்லி ஏராளம் ஏசுகின்றீர்? யார்குற்றம்?
கருசுமக்கும் தாயின்மேல் கடும்காயம் விளைத்துநின்றால்
கருணைத்தாய் பொறுக்கணுமா? கண்ணீரும் அடக்கணுமா?
அணுவெடிச் சோதனைக்கே அடியாள்யான் பலிகடாவா?
அணைகட்டி என்வயிற்றை அனல்காய வைக்கின்றீர்!
மரம்வெட்டி என்நரம்பை மலடாக்கிப் போடுகின்றீர்!
சுரம்வரும் அளவுக்குக் காட்டில்தீ வைக்கின்றீர்!
மண்என்னும் ஜாலத்தை மழுங்கடித்தே பாலைவனப்
புண்ஆக்கி மகிழ்கின்றீர்!நச்சுவாயு கலந்தே
மாசுகளை ஆற்றிலெல்லாம் மனமாரக் கொட்டிநின்றால்
ஆசுகவி உம்மேலே அற்புதமாய்ப் பாடுவனோ?
குழந்தைகள் எனப்பொறுத்தால் கோட்டானாய் மாறிநின்றே
அழிவையே நாடுகின்றீர்!அதனால்தான் உ(ம்)மைத்திருத்த
வெள்ளமென்று நீர்த்தேவன் துணைகொண்டே வீறுகின்றேன்!
கள்ளமிலை (என்)அறிவுரையில்!வெளிப்படையாய்க் கழல்கின்றேன்!
காளிக்கு(ஏன்) ஆயிரம்கை எனஒன்றை நீர்வெட்டின்,
காளிகைச் சூலம்உம்மைக் கவனமாய்ப் பார்க்காதோ?
ஆதிசேடன் ஒன்றுக்கு ஆயிரம் தலைகள்ஏன்?
பாதிதலை வெட்டிநாம் பஸ்பம் தயாரிப்போம்
எனநீங்கள் வணிகராய் இப்போது மாறிநின்றால்,
தனைத்தாங்கும் அதன்தலைவர் சாய்ந்துகொண்டே இருப்பாரா?
சிந்தனை செய்யஏன் 'காசுக்காய்' மறுக்கின்றீர்?
வந்தனை செய்யஅன்றோ ஆறுகட்கே மங்கைபேர்
வைத்தார்கள்!மணல்வெட்டி என்வயிற்றில் அடிப்பீரேல்
கைத்தாளம் போட்டேயான் காம்போதி பாடுவேனோ?
வன்முறையை வளர்த்தேநீர் மாசறுஎன் உயிர்களையே
கொன்றால்யான் ககனகுதூ கலத்தில் வாழ்த்துவனோ?
குப்பைகளை என்னுடம்பில் குஷியாய்நீர் கொட்டிநின்றால்
தப்பட்டை வாசித்துத் தனிநடனம் ஆடுவனோ?
ஆதலினால் நிலமென்னும் அசட்டு மெல்லியலாள்
பாதகங்கள் பொறுத்துநிற்கும் பலமில்லாக் கருணைத்தாய்
என்றினிமேல் குழந்தைகளே! இழிவுச்செ யல்செயற்க!
கன்றுகளும் தம்வாலால் கனஅடிகள் தரமுடியும்!

Thursday, December 23, 2010

இமயத்தில் அந்திப்பொழுது

அந்திப் பொழுதே!அழகிய பாடல்கள்
சிந்திடும்  சொல்போல் சிறந்தனை!-வந்தனை
சொன்னேன், அடைந்தேன் சுகம்! (1)
சுகமாய் இமயப்பூ ‘நீல்கமல்’*தன் தோகை..(*of very big size)
அகம்குளிர்ந்(து) உன்னைஅழைத்(து) ஆட்டும்!-தகவுடையோர்
சான்றோரைக் காண்பதொப்பத் தான்! (2)
தான்அடையும் சித்தர்காண் பேற்றைத் தக்கவைக்கத்
தானல்லோ கார்இருட்டைத் தாமதித்தாய்--கூனியைப்போல்?
பிந்தவைத்தாள் கண்ணனைஅப் பெண்!* (3)
பெண்போன்ற வானே! பெரும்போழ் துனைப்புல்லும்
கண்கதிர்ச் சூரியன், நீ காணாது-பெண்வேறு
தேடினன்என் றோஇச் சிவப்பு? (4)
சிவப்பான மேகங்கள்! செம்மைச் சிகரம்!
கவிவார்க்கும் ஓடைக் களிமீன்,-இவை,அந்தீ!
எல்லாமே உன்றன் எழில்! (5)
எழில்கூட்டும் உன்னால் இயற்கைப்பெண் மேகம்
இழைத்தபுதுத்  துப்பட்டா ஏந்திப்-பிழையாகப்
போர்த்தித் திரிகின்றாள் போ! (6)
போர்வை எனஇலைகள் போர்த்தும் மரங்களும்
கோர்வையாய் அந்திஒளி கொண்டு’மதி’--யார்போல்
கடன்வாங்கும் சாமர்த்யம் காண்! (7)
‘காண்போமா இவ்வந்தி கண்டபின்னே பேரொளியை?
பூண்இருள் ராட்சசிவாய் போம்- ‘ஐயம்-----தீண்டப்
பறவைஎலாம் ஓடுதே பார்! (8)
பார்க்கும் அலை,.அழகு! பாய்ந்(து)அடையும் ஆ(டு)அழகு!
சேர்ந்தோடும் நண்டுகளின் சீர்அழகு!---கூர்த்தமதி
பின்வானில் நாணுவதும் பீடு! (9)
பீடுடைக் காவியமே! பேசிநின்றேன் உன்னுடனே!
ஈடில் பரவசமும் எய்தினேன்!--தேடும்
அழகிலெதும் ஒப்பாமோ அந்தி!! (10)
* (In Himalayas many a time the அந்திப்பொழுது is long!.. it reminds  me that kooni' who begged Lord Krishna (in kamsan Story-, when He marched on to kill him-)- in so many words  to take her Sandal Paste and bless her!)-( and you know  that she became a girl by His Grace!)

கம்பன் கவியே கவி!

கவிகேட்டால் நம்தலை, கண்யாவும் சுற்றும்!
சுவைரசித்த சொர்க்கமாய்ச் சொக்கும்!-அவன்பாட்டைத்
தெம்புடனே பாடிடிலோ தேன்சொட்டும்! மெய்அய்யா!
கம்பன் கவியே கவி!
விதம்விதமாய்ச் சந்தமதில் வேண்டுமட்டும்  பாடி
இதமாகப் பக்திக்குள் ஈர்த்தான்!--சுதிகூட்டி
உம்பரும் ‘ராமகுணம்’ ஓர்ந்தே புகழவைத்த
கம்பன்கவியே கவி!....(2)
"விவேகம் இராமனின்சொல்! மெல்லியள்சீ தையை
அவாவும் இராமநெஞ்(சு) அழகு!"--சுவைபட
நம்புவண்ணம் தேன்கவியில் நம்முன்(பு) ' இதைச்'சொன்ன
கம்பன் கவியே கவி!..(3)
கவிஅழகில் சொக்குவமா?காவியந டையின்
சுவையை வியப்போமா?சூரன்--புவியாண்ட
நம்ராமன் வில்வேகம் நாட்டியதைப் போற்றுவமா?
கம்பன் கவியே கவி!..(4)
விண்டுரைப்பான் தூங்கா வியன்தொண் டிலக்குவனை!
‘கண்டு’போல் சூர்ப்பநகை காதையும்!--கொண்டநன்றிக்
கும்பகர்ணன் பாட்டில் குவலயமே விம்முமய்யா!
கம்பன் கவியே கவி!...(5)
விம்மிதமாய்க் கூறித் தமிழ்க்கற்பை மேலுயர்த்த
“எம்அ(ன்)*னையை மண்ணோ டெடுத்தானே!-விம்மியழும்
நம்தேவி யைஅரக்கன்”- என்றே ’நயம்’உரைத்த
கம்பன் கவியே கவி!...(6)
.........(*இடைக்குறை எனக்கொள்க)-
வித்தைபோல் கற்பனைகள்!வீசிவரும் புத்துவமை!
சொத்துப்போல் பாத்திரத் துல்லியம்!--இத்தனையும்
கும்பமுனி காவிரியைக் கொட்டினன்போல் கொட்டினனே!
கம்பன் கவியே கவி!..(7)
(மாற்றுநடை)
விஞ்சிநின்றீர் அன்பிலே! வீரர் பலரை’வள்ளல்’
கொஞ்சியே தம்பி!எனக் கூவவைத்தீர்!!-துஞ்சாத
நும்பாட்டால் அப்‘பரதன்’ ஞானியென்றீர்! சொல்வேன்யான்,
‘கம்பன் கவியே கவி!.’..(8)
கவித்துவத்தில் வானுயர்ந்தீர்!! கைகேயி சொல்லே
புவியில் அரக்கரெலாம் பொன்றச் -சுவையான
தெம்புதந்த  ‘காரணம்’  என்றீர்!யாம்  தேர்ந்துசொன்னோம்,
“கம்பன் கவியே கவி!.”(9)
வியன்கவியே! கம்பரே!! மேனிசி லிர்க்கும்
அயன்சொற்கள் யுத்தகாண் டத்தில்!--வியக்கின்றேன்!
நும்படைப்பே ‘சித்து’என்று நூறு முறைநுவல்வேன்!--
“கம்பன் கவியே கவி!”

மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!

மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!
....வழியில் தீமையும் மேய்ந்து வரட்டுமே!
இனிப்பையும் கசப்பையும் ஊட்டி விடுங்களேன்!
....எதுதான் வலி(து)என அதுவே உணருமே!
சிங்கத்தை அங்குசம் கட்டுப் படுத்தாது!
....சிறுமுயல் நரியின் கண்ணுக்குத் தப்பாது!
தங்கத்தில் நகையும் அணியணும் என்றால்,
....தணலிலே வாட்டணும்,தண்ணீரும் காட்டணும்!1
(வேறு)
ஓடிக்கொண் டேஇருக்கும் எண்ணத் தால்தான்
....உரம்பெறுமே நம்மனம்தான்!எண்ணிப் பாரீர்!
தேடிக்கொண் டேஇருக்கும் ஆசை கூட
....தினம்தினமும் வரும்எண்ணம் திடமாய் ஆனால்,
வாடிக்கொண் டேஇருக்கும் நெஞ்சம் ஓர்நாள்
....வளர்ந்துபற்றும்!தெய்வஅருள் வெற்றி சேர்க்கும்!
நாடிக்கொண் டே இருக்கும் ஆன்மத் தேடல்
....நல்லதொரு தியானத்தில் ‘ஒளியை’ப் பார்க்கும்!
எனவேதான் மனம்போகும் போக்கை நீவிர்
....இறுக்கிக்கட் டாதீர்கள்!”....மகான்கள் சொன்னார்!
தனியாக அஃதுஎங்கோ சுற்றிப் பின்பு
....தானாக நம்வசத்தில் வந்து சேரும்!
நுனிக்காம்பு காய்பற்றல் போல்அ ணைத்தே
....நொடிஎல்லாம்  ‘ஒளி’ என்றே பார்க்கச் செய்வீர்!
கனியாதோ  வேளைவந்தால் காயும் கூடி?
....காய்’ என்றே நும்மனத்தைக் காய்ச்சா  தீர்கள்!!
கறைநிலவும் வானத்தில் ஒளியை வீசும்!
....காடுநின்ற மரமும்நம்  கூடம் ஏறும்!
குறைசொன்ன கண்ணகியும் தெய்வம் ஆனாள்!
....கூனியினால் ராமன்கதை மாறிப் போச்சே!
வரிவரியாய், அலைஅலையாய் மனம்போ னாலும்
....மகான்சரிதம் பற்றிநின்றால் அடங்கி நிற்கும்!
அருவிக்கும் ஓரிடத்தில்  ‘சாந்தி’ உண்டே!
....அமைதிஉற்ற மனத்திற்கும் ‘காந்தி’.. உண்டு!
(வேறு)
ஆம்!
கரம்பு நிலத்தை உழுது வெற்றி
....கண்டு மகிழும் இந்த ‘மனம்’!
அருண கிரியின் லீலை’ ஒடுக்கி
....அருளாய் மாற்றிய திந்த மனம்!
மனமே உன்னைநீ நம்பி னாலே
....வாழ்வும் உயர்வாய் மாறிவிடும்!
தினமும் எண்ணச் சுழலில் இருந்தும்
....தெளிந்தால் அமுதம் வரவாகும்!
 
பயணம் போகா மனத்தி னாலே
....பாதை சுருங்கிப் போய்விடுமே!
குயவன் பிசைந்த கடின மண்ணும்
....கொலுவில்  வருமே! உணர்ந்துநிற்பாயே!
(முடிவாக)-
மனமெனும் பசுவை மேய விடுங்களேன்!
....வழியிலே நன்மையைக் கண்டு மகிழுமே!
தியானத்தில் நில்லுங்கள்! தேவனாய் மாறலாம்!
....தினமும் பிறர்க்கே நன்மை செய்யலாம்!

வேல்முருகன் தினம்தரும் விருந்து!

வேல்விழியாள் எனைச்சாய்க்க வழிகண்டாள்!-கண்ணில்
....வேலைஇவள் கொண்டன்றோ வெற்றிகொண்டாள்”-என்று
சூல்பிடித்த  அறிவாலே முருகாநீ கண்டாய்!- 
....சூரனையே சாய்த்திடஅவ் வேல்கையில் கொண்டாய்!
கால்பிடித்த என்வினையை விரட்டிடவே வேலா! 
....கணநேரம் பயன்படுத்து! கெஞ்சுகின்றேன் முருகா!
நூல்பிடித்துத்  தொடுத்தஉடை மேனியதன் மானம் 
....நொடிதோறும் காப்பதுபோல் அருளென்மேல் தொடுப்பாய்! (1)
என்விழிக்குள் உன்விழியைப் பொருத்திடுவாய் முருகா!
....என்அன்பால் உன்தோளைப் புல்லிநின்றேன் கந்தா!
என்கரத்துள் உன்ஒருகை சக்தியினைக் கோப்பாய்!
....எத்தனையோ சந்தமதால் உனைத்தொழுதேன் வேலா! 
உன்அருளை என்அகத்துள் கூட்டக்-கா ணிக்கை 
....ஒருபோதும் நீகேளாய்! அறிவேனே முருகா!
மின்னலது முகில்இணைக்க,-மழைஒன்று மண்ணில்
....மேவிஒரு கருணைசெய்யக் காணிக்கை உண்டோ? (3)
ஏந்திநின்றாய் ஒருகோலை! விழவைத்தாய் தாளில்!
....இயக்குகின்றாய் அண்டத்தை! உறைந்தாய்-நெஞ் சத்தில்!
வேந்தனைப்போல் அடியார்முன் ஆணைகளி டாமல் 
....மேவிநின்றே ஏவல்செய்தாய்!...-அன்பர்காள் பாரீர்!
சாந்தமெனச் சந்தனத்தால் முகம்பூசி மகிழ்வைச்
....சந்ததமும் காட்டுகின்ற என்னவனைப் பணிவீர்!
காந்தமென்றே அறிவீர்நீர் அவன்விழியை! ...- பாரீர்! 
....கருணைகண்டு மெழுகெனவே உருகித்தாள் சேர்வீர்!
11-11-10

சாமிகளை நம்பினால்..?

என்றன் நெஞ்சில் அழுக்கி லாததால்
....யாரின் காலிலும் விழுவதில்லை!-தினம்
என்றன் கால்”(காற்று)-ஏறி தியானம் உணர்வதால்
....என்னைச் சாத்தான் பிடிப்பதில்லை!
எதுதான் ஆநந்தம் என்றே உணர்ந்தால்
....யாரையும் நம்பிப் பிழைக்கணுமோ?-அட!
புதியவெண் மேகமும் தினமும் கறுத்தால்
....பூமியில் வெப்பமும் தங்கிடுமோ?
பேசிப் பேசியே ஆச்ரமம் வளர்ப்பதா
....பெரீய சாதனைகள்?-மகான்கள்
நாசி அதிர்விலே உலகே அதிர்ந்த(து!)-அது
....நடராச முத்திரைகள்!
பூமியில் அவரவர் வினைகளே பாவ
....புண்ணியம் நிர்ணயிக்கும்!-இன்றைச் 
சாமிகளை நம்பினால் நமது கௌரவம்
....சந்தி சிரிக்கவைக்கும்!
காவி உடைகண்டு ‘கடவுளே!” என்பதால்
....கர்வம் குறைவதில்லை!-அட அட!
காவி உடையிலே கடவுள் யாருமே
....கம்பி எண்ணவில்லை!

Sunday, December 19, 2010

வேல்முருகன் தினம்தரும் விருந்து!

வேல்விழியாள் எனைச்சாய்க்க வழிகண்டாள்!-கண்ணில்
..... வேலைஇவள் கொண்டன்றோ வெற்றிகொண்டாள்”-என்று
சூல்பிடித்த அறிவாலே முருகாநீ கண்டாய்!-
..... சூரனையே சாய்த்திடஅவ் வேல்கையில் கொண்டாய்!
கால்பிடித்த என்வினையை விரட்டிடவே வேலா!
..... கணநேரம் பயன்படுத்து! கெஞ்சுகின்றேன் முருகா!
நூல்பிடித்துத் தொடுத்தஉடை மேனியதன் மானம்
..... நொடிதோறும் காப்பதுபோல் அருளென்மேல் தொடுப்பாய்! (1)

என்விழிக்குள் உன்விழியைப் பொருத்திடுவாய் முருகா!
..... என்அன்பால் உன்தோளைப் புல்லிநின்றேன் கந்தா!
என்கரத்துள் உன்ஒருகை சக்தியினைக் கோப்பாய்!
..... எத்தனையோ சந்தமதால் உனைத்தொழுதேன் வேலா!
உன்அருளை என்அகத்துள் கூட்டக்-கா ணிக்கை
..... ஒருபோதும் நீகேளாய்! அறிவேனே முருகா!
மின்னலது முகில்இணைக்க,-மழைஒன்று
..... மேவிஒரு கருணைசெய்யக் காணிக்கை உண்டோ(2)

ஏந்திநின்றாய் ஒருகோலை! விழவைத்தாய் தாளில்
..... இயக்குகின்றாய் அண்டத்தை! உறைந்தாய்-நெஞ் சத்தில்!
வேந்தனைப்போல் அடியார்முன் ஆணைகளி டாமல்
..... மேவிநின்றே ஏவல்செய்தாய்!...-அன்பர்காள் பாரீர்!
சாந்தமெனச் சந்தனத்தால் முகம்பூசி
..... சந்ததமும் காட்டுகின்ற என்னவனைப் பணிவீர்!
காந்தமென்றே அறிவீர்நீர் அவன்விழியை! ...- பாரீர்!
..... கருணைகண்டு மெழுகெனவே உருகித்தாள் சேர்வீர்! (3)