Sunday, November 9, 2025

 19-11-25

முன்னர்பெற்ற  மோதகம் முற்றுமுண் ணாமலே

இன்றுவரும்ஏ ழைக்காய் இருத்தினை—என்னை

வசப்படுத்திக்  காக்கின்ற  வள்ளல்நீ   -என்றன்

தசச்செய்யுள் வாழ்கஎனச்…  சாற்று!..

 

அத்தாழநல்லூர்  அன்னையே!

…………………………………………………………………………..(கவியோகி   வேதம்)19-08-25

முத்தைப்போல்   புன்னகை,  முதுகிலோ   வஞ்சக்கண்,

     முரடர்கள்   நடுவில்நான்  ஏனம்மா?

   முடியாத போதிலும்,சலிக்கின்ற வேளையும்,

     முனகலுடன் கழிக்கிறேன்    பாரம்மா!

செத்தையும்   சிலசமயம்     குளிர்காயப் பயன்படும்;

    சிலமனிதர்  ஒன்றுக்கும் உதவாரே!

  சிறப்பான பிறப்பைநீ  எனக்கிங்கே  அளித்துமே,

      சீர்பெற்ற  உற்றாரை அளித்திலையே!

கெத்தாய்என்   ஊழ்-எனை  அச்சுறுத்தும்     போதிலே

     கிரணம்போல்  வந்தேநீ  காவல்செய்வாய்;

     கீழ்மேலாய்   உன்நெற்றி  தொட்டொரு  சுட்டிகண்டேன்

      கிண்ணென்(று)அவ்  வைரக்கல்   கவர்ந்ததே!

   அத்தாழ  நல்லூரில் பெருமாளின்  மார்புறை

     அன்னையே  என்மஹா  லட்சுமியே!

    ஆதரவாய்  என்பக்கம்  நீயிருந்தால் போதுமே!

       அகிலத்தை வெற்றிகொள் வேனே!    —1)…

2  வன்முறை காச்மீரில் வடக்கேயும்  ஆள்பலி

      வருந்தினோம் கண்டுநாம்  கண்முன்னே;

        வைரம்போல்  சுதந்திரம் பெற்றாலும்   பயனென்ன?!

         வாழ்வென்றால்  அன்பிலையோ சொல்தாயே!!

   கன்னலாம்   விடுதலை   பலபேர்க்குத் தறுதலைக்

          களமாகப்  போகுதே! அன்னையே!  

      காதில்உன்  தோடுகள்   கவிதையைக்  கிளப்பிடும்,

         கணநேரம்  அமைதியைத் தந்திடும்;

   என்றாலும் அரசிலே நம்மவர்  புகுந்தபின்

       எத்தனை   ஊழல்கள்,  மோசடி;

        எப்போது   நம்நாடு   சீர்பெறும்  என்றுநம்

            இந்தியா உலகின்முன் ஒளிபெறும்?

    பொன்போன்ற நதியோரம்  அமைந்தஎம் கோவிலில்

        பொலிகின்ற  பெருமாளின்  மார்புறைப்

           பூரணப்  பூவே! இலக்குமித்  தாயே!

        புதிதாய்ஓர்  ஆக்கினை  அருள்வாயே!!

  

    

 

 

 

கிளிஜோஸ்யம் பார்க்க வாருங்களேன்!!

 ***********************************09-11-25

                                               (---வேதம்-)--(ஈறடித்தாழிசை-)_

 

கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக் கிறுக்(கு) என்பர்;--விஞ்ஞானம் 

வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை இன்று! அது, மூட 

 

நம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே கெஞ்சுகிறேன்! 

கும்பிடுவேன் உம்மைநான்! கூண்டுவைத்துப் பிழைப்பவனைக் 

 

கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம் பாருமய்யா! 

அருமையாய்க் குறிகேட்க அமருகிற வேளையில்தான், 

 

'பறவை' அது ஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை! 

குறிசொல்லி முடிந்தபின்தான், கொறிக்கிறது  ஒரு- நெல்லை! 

 

எங்கெல்லாம் கிளிக்கூண்டோ அங்கெல்லாம் போம் அய்யா! 

அங்கு போய்ப் பாரும் உமதிர்ஷ்டத்தை; இறைஞ்சுகிறேன்! 

 

பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும் தெரியாமல் 

எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் 

 

வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப் போல் மெலிந்திருக்கும் 

பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே போய்ப் பாரும்! 

 

அடிக்கடி போனால், இறை அடியாரே நீர் அன்றோ? 

படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு செய்வதினும், 

 

பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால் 

சொர்க்கத்தின் இருகதவை ஒரேகையால் திறக்கின்றீர்!!

******************************************************

 

 

வேள்விச் சாம்பலில்  ஃபீனிக்ஸ்!

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவிஞர்  வேதம்)

உழைக்கத் தெரிந்த  வாலிபனே!-உன்னை

உலகம் உயரே  வைக்குமடா!

பிழைப்பில் உழைப்பே பரிசென்னும்-ஞானம்

பிறந்தால் வாழ்வே  இனிக்குமடா!

 

வியர்வை  உடம்பின்  கூட்டல்!-சோம்பல்

விடுத்தல்,   கழித்தல், இன்பமடா!

அயர்வே   இல்லா   வீரம்-உன்னை

அறிஞர்   புகழ  வகுக்குமடா!

.

வெற்றி  உழைப்பின்   சுரங்கமடா!-ஆர்வம்

  விரியும்   நெஞ்சம்  வைரமடா!

 சுற்றம் கீழே   இழுத்தாலும்-துணிவாய்ச்

சுழன்று, ஒளிர்ந்தே  பயன்எடுடா!

 

எடிசன்  உழைத்தான்  வெற்றிகண்டான்!-பொருள்

 எத்தனை எத்தனை கண்டுதந்தான்!

முடியாத துண்டோ உன்அறிவில்?-உழைப்பின்

முடிவில்  இறைவன் வரம்தருவான்!

 

இந்திய  சுதந்திரம்  எதன்விளைவு?-அதற்கு

  எத்தனை  வீரர் பலிகொடுப்பு?

தந்தையாம் காந்தியின் மனஉழைப்பு;-வேள்விச்

  சாம்பலில் ஃபீனிக்ஸ்’ உயிர்த்திருக்கு!!-

*********************************************(கவிஞர் வேதம்-)09-11-25

  !

 

 

 

 

 

 

 -09-11-25  

 

கவியோகி வேதம்

 

 

meesai naaikar

 

 

 

 

 

 

 

  என்  கிராமத்து வீட்டில்1960-70வாக்கில் என் தாத்தாவையும்வீட்டையும் கவனிக்க  ஒருநல்லவேலைக்காரரிருந்தார். அவரைப்பற்றி ஒருசித்திரம்..--

 

 

மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்

..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!

ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை

…”ஆண்டே” மீசை  இவர் வளர்த்தார்!

 

இங்கிலீஷ் எழுத்து “டபிள்யூ’போல்-ஐயா!

..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?

பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!

பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!”

 

என்றே கேட்டால் சிரித்திடுவார்!-“கின்னஸ்”

..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!

இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,

..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்!

 

பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர்

..பத்து கலையும் அறிந்திடுவார்!

வீம்புக் கிதனைச் சொல்லவில்லை-செய்யும்

..வேலை சொன்னால் மிகையுமில்லை!

 

ஈனும் பசுவுக் கருகிருப்பார்!-முதுகை

..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!

பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப்

பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!

 

காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்

கரண்டி நெருப்பில் போடுகையில்,

வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்

..வட்டம் போடும் கலைதெரியும்!

 

ஜாதிச் சேவல் மடியில்வர-கேப்பை.

….ஜலம்கலந்தே ஊட்டுகையில்

ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ

..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!

 

விடலைப் பனையின் குருத்தெடுத்தே-பாலர்க்கு

..விசிறி பண்ணித் தருகையிலோ

இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்

..ஈந்த ‘சபரி” முகம்தெரியும்!

 

மீசை வளர்க்கும் கலையிலும்தான்,–லட்சிய

..வேட்கை அன்றோ தெரிகிறது!

பூசை,’தெய்வம்’ இவர்அறியார்!-உழைப்புப்

…”பொழுதே” கடவுள் என்றறிவார்!

 

கரணை கரணை யாய்கைகள்!- நல்ல

..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!

கருத்த உருவம், “காளி’யைப்போல்!-எனினும்

..கருணை வடிவம் அவர்இதயம்!

.

மீசை நாய்க்கர் ஒரு சுரங்கம்!- அவர்

மீசை, உழைப்பு,.. கலைஅரங்கம்..(கவிஞர் வேதம்)

 

 

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்..

**************************************(கவியோகி வேதம்)-08-11-25

எந்தத் தலைப்பிலும் எழுதும்   திறன்பெற்ற

அரங்கத் தலைவரை  அழகுற வணங்கினேன்;

என்னால் முடிந்த   எண்ணம்   தருகிறேன்;--

அந்த  நாட்கள்  எங்கு போயின?—ஆ!

சிந்தனை புரண்ட  சீர்மிகு  நாட்கள்;

கருத்துகள் உதிர்ந்து கனிதந்த நாட்கள்;

திரண்ட  உடனேயே திருப்திக்  கணங்கள்!

சீடர்க்  கெல்லாம்  அவற்றைப் பகிர்ந்து

புதுமைப் பாதை பூரித்த நாட்கள்,

எல்லாக் கணமும் எங்கு  போயின?

 அந்தக் கருத்துகள்,  ஆழச் சிந்தனை

முதுமை  வந்ததும்   முடங்கிப் போனவோ?

இளமை  இருப்பின்தான் மூளையில் இருக்குமோ?

உடுக்கை  இழந்தாற்போல் ஏனோ   ஆயினேன்!

மாத்திரை களில்தான்  யாத்திரை  தொடர்கிறது;

படுக்கையில்    வீழ்ந்ததும் பாதாளம் விரியுமோ?

கடுக்காய்   கொடுக்குமோ  கருத்துப் புதுமைகள்?

எத்தனை  புதுமைகள்! எத்தனை  பாதைகள்;

வெள்ளம்  வயல்களில் தங்காத வண்ணம்

வடிய புத்தியில்  வந்த   கருவிகள்,

வறட்சிக் காலத்தில்  முகிலைக் கொணர்ந்தே(வீடுமுன்)

மழையைத் திரட்டிய  சிந்தனைச்  சிதறல்கள்

ஊழல்கள் களைய  உதவிய ராணுவம்,

 சட்டக்  கிடுக்கியில்  அற்பரை நெருக்கல்,

என்றபல்  சிந்தனை  எல்லாம் போச்சே!

  கிராமங்கள் வளர உதித்த கருத்தும்

  மராமத்து செய்யாமல்   மங்கிப் போயிற்றே!

  மறதி  என்கிற பாம்பு  விழுங்கியதே!

.   சரிதான். சென்றது கனவாய்ச்  சரிந்தது;

   என்றே   கொள்கிறேன்.இனிவரும் கருத்தை

  ஏட்டில்  எழுதுவோம்;இளம் விஞ் ஞானிகள்

   கையில் தந்தால் புதுமை செய்வரே!

  சரியே;சின்னாள் போகட்டும்;  பார்ப்போம்.

 கருகிய மொட்டின்  பக்கமே இன்னொரு

 விரிந்த மொட்டு வளராமல் போகுமா?

நேற்றைய குயிலும் இன்றுவந்து   கூவாதா?

மனத்தை   இளமையாய்  வைப்போம்;

ஜனிக்கும்  ஆயிரம் சிந்தனை!தளர்விலை;

 நாளைய பாரதம் நன்றாய் இருக்கும்.

 சிந்தனைப்  பந்தல் சீராய்  விரியும்;

எனும்   நம்பிக்கை யுடனே  எழுந்தேன்;

வாழ்க  நேரிய எண்ணம்; வாழ்க என்-நாடு!(வேதம்)-

 

Sunday, April 26, 2020


 My new Poem
**************
கற்பனைத் தேரேறி கவலையை மற;-
&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)26-04-20
கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
  கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
   அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?
.
 விண்ணில்உன் கற்பனை பாய்ந்து நின்றால்
   மேவிடும் காட்சிகள் இன்பமடா!-மனக்
 கண்ணிலே தென்படும் அமுதக் குடம்
   கவலை- அசுரரை மாய்த்துவிடும்!

 வளைந்து வானிலே பாயும்அந் நாரைகள்
    மாயையடா இந்த உலகம் என்னும்!
 உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாக விண்ணிலே தேய்ந்து விடும்!!
   


Tuesday, April 3, 2018

பசுபதிவுகள்: 682. ஔவை துரைசாமி - 1

.                என் பழைய கிராமத்து வீடு  09-11-25

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)-

 

வாசற் புறத்தில்,- செண்பகப் பூக்கள்

   வாவா   என்றே   நம்மை அழைக்கும்;

ஆசை  கொண்டே  ரோஜாப் பூக்கள்  

  அன்புடன்    நெஞ்சைக்  கவர்ந்து   கொள்ளும் ; 

  

 பகலும் இரவும் பறவைக் கணங்கள்  

    பலவித  ராகத்தில்  கவிதை நெய்யும்;

குகைபோல் தெரியும்என்   தாத்தா இல்லம்

   கிராமப்   பகுதியின்  கொடை   வசந்தம்.

 

எத்தனை அறைகள் !எத்தனை ஜன்னல் !

.. எல்லாம் பார்த்தால் அதிசயப் பின்னல் !

. பித்தனைப்   போலே  குருவியை, கிளியை

..  பிரமிப்பாய்ப்  பார்த்துக் கொண்டி  ருப்பேன் .

 

  கொல்லைப் புறத்தின்   கதவு  திறந்து

    கூர்மையாய் ஆற்றின்  ஓசையைக்  கேட்பேன் ;

.. எல்லையில் லாத  இன்பம்  கொள்வேன் ;

   யாரும் அழைத்தால் கோபம் கொள்வேன்.  

 

. பார்க்கும் போதே நாரை  ஒன்று

  .. பச்சென்று   மீனை அலகில்    தூக்கும் .

. யார்க்கும்  அஞ்சா எருமை  ஒன்று

   எங்கிருந் தோவந்து நீரைத்  துளைக்கும். .

. .

காய்ந்த  மணலிலும் குழிகள்  தோண்டி

    கற்களைப்   படிபோல்  அடுக்கி  அடுக்கி

 பாய்ந்தே வருகிற தெளிந்த  நீரைப்

  பங்கு  போடுவர்  கிராமச்  சிறுமியர்..

 

என்னே   சொல்வேன் அன்றைய  அழகை!

  இன்றோ  வீடே சற்றே சிதிலம்!—ஓ!

முன்னாள் நினைவெலாம்   ஒதுக்கி விட்டேன் ;அதை

  முதியோர்  இல்லமாய் மாற்றி   மகிழ்ந்தேன் !(கவியோகி  வேதம் )-

     

--