Sunday, January 30, 2011

கவிதைக்கனல்


சூடு ஏறாத சொற்களால் கவிதை
..தொடுக்க எனக்குப் பிடிப்பதில்லை!
மாடுகள் கூட புல்இழுக் காமல்
..மந்தையில் சும்மா இருப்பதில்லை!

அப்போ திருந்த மக்கள் எல்லாம்
..அடிமைத் தனத்தால் குளிர்ந்திருந்தார்!
தப்பா வரிகளில் மாகவி பாரதி
..தணலை ஏற்றி உசுப்பிவிட்டார்!

பாரதி ஏற்றிய கவிதைக் கனலால்
..பாரத விடுதலை உறுதியாச்சு!
சாரதி உசுப்பிப் பெண்கள் எழுந்து
..சமத்துவ உரிமையும் கோரியாச்சு!

பாரதி தாசனின் புரட்சிச் சொற்களால்
..பாதி விதவையர்க்கு மணமாச்சு!
கூர்மைக் கனலில் சாதிப் பிரச்னை
..குனிந்தே வெந்து அமைதியாச்சு!

அன்றைய ஆட்சியர் கவிதைக் கனலுக்கு
..அரண்டு பணிந்த காலமது!
இன்றைய ஆட்சியரை எந்தச் சூட்டிலும்
..எருமை மாடாய் வைப்பதெது?

மானம் வெட்கம் இருந்தா லன்றோ
..மனிதன் சூட்டுக்கு பயந்திருப்பான்!
ஊனம் இல்லா ஆட்சி நடத்த
..ஒப்புக் கொண்டு நிமிர்ந்திருப்பான்!

அப்பரின் பாட்டால் சூலை நோயும்
..அப்படி யேஓடிப்போனதுவும்,
செப்புச் சுந்தரர் செப்பிய வரிகளால்
.. சிவனே நெருங்கி வந்ததுவும்,

பாட்டின் கனலுக்குப் பலத்த சாட்சி!-(எனில்?)-
..பழைய ‘டப்பா’ உதவிடுமா?
ஓட்டுப் பெட்டிகள் நிறைந்த பின்னாலே
..ஓட்டைக் கனலும் மதிப்புறுமா?-(ஆக)

கவிதைகள் படிக்க மனமே இல்லா,
 ...கற்றோர் இருக்கும் நாட்டினிலே
கவிதைக் கனலைப் பற்றிப் பேச
..கசப்புச் சுவைதான் நாவினிலே!

1 comment:

  1. அட அட! பின்னிட்டீங்க யோகியாரே!

    பாரதி தாசனின் புரட்சிச் சொற்களால்
    ..பாதி விதவையர்க்கு மணமாச்சு!
    கூர்மைக் கனலில் சாதிப் பிரச்னை
    ..குனிந்தே வெந்து அமைதியாச்சு!

    ReplyDelete