Monday, January 17, 2011

என் கணக்கு வாத்தியார்

என் கணக்கு வாத்தியார்


கணக்கிலே சுமார்யான்! என்றால்,
..கணக்கிலே கசப்புச் சேர்த்த
பிணக்குவாத் யாராய் ராமன்
...பிரம்படி கொண்டே தாக்கின்
கணக்குப்போ டுவனா?அன்னார்
..கண்கண்டால் ஓடினேன் காதம்.
மணக்கிற மல்லி கையில்-
...மலத்தினைச் சேர்த்தார் அய்யா!


..(வேறு-)-


உருட்டு விழிகள்! வட்டில்
..ஒப்பத் தலையில் பாகை!
சுருட்டு வீச்சம்! வாயில்!
..சுத்த ஆங்கி லத்தில்
வெருட்டும் திட்டு! மீசை
..வேறு! அய்ய னாரோ
இருட்டு வண்ண வாத்யார்?
..இவரின் பேரா ராமன்?


என்றே சிமிட்டும் கண்ணோ(டு)
..எவரும் நகைத்தார் அன்று!--
என்ன வாத்யார் அன்னார்
..என்றே பசங்கள் திட்ட,
தின்னும் பண்டம் போன்ற
..தேன்கணக் கிற்கும் அஞ்சி
மின்னும் பிரம்பின் வீச்சை
..மிகவே வாங்கி நொந்தார்!


குரலில் இடியின் ஓசை!
...குண்டு உடம்பால் தூக்கம்!
பொருட்டாய் மதியார் எம்மை!
..பொறுமை சற்றும் இல்லை!
அருமை கணக்(கு)என் னாமல்
..அதட்டும் உறுமல் சிங்கம் !
இறந்தார் மார்அ டைப்பால்!
..எனக்கோ நூறு மார்க்கே!

2 comments:

  1. நல்ல கணக்காசிரியர் போங்கள்! கணக்கில் பூஜ்யம்தானே!

    ReplyDelete
  2. மகத்துவம் வாய்ந்த தங்கள் கவித்துவத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நூறாண்டுகாலம் தங்கள் இலக்கியத் தொண்டு தொடர என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete