Friday, July 1, 2011

பேய்மழைத் தெரு

பேய்மழைத் தெரு

(நேற்று)_
ஒருபேயின் கைபோலே புயல்மழை ஓங்கிற்று!
கருவம் கொண்டுஅது  மண்ணையெல்லாம் கசக்கிற்று!
..
கண்ணாடிச் சுவர்வழியே பெண்களெல்லாம் காண்கின்றார்!
புண்ஆகும் தெருப்புலம்பல் அறியாமல் புன்னகைத்தார்;
..
குட்டைச் செடிகளையும்,’கொரியன்’ பூக்களையும்
நெட்டைக் கிளைகளையும் நீள்மழை,தன் கைகளினால்
..
பிய்த்தே எறிதல்கண்டு பிரமித்துச் சிரிக்கின்றார்!
கைத்த,பா கல்கசப்பு கடித்தவர்க்கன் றோதெரியும்!!
..
நான்குமணி பெய்தமழை தெருநாற அடித்ததய்யா!
கூன்கிழவி போல்குனிந்த சாக்கடை மூடியெல்லாம்
..
அடித்தமழை விரல்நோண்ட ஆகாயம் பார்த்ததய்யா!
துடித்த ‘நாற்றநீர்’ துள்ளியே பிளந்துவர,
..
மனித மூக்கெல்லாம் ‘விரல்மூடி’ கொண்டதய்யா!
இனித்ததெருக் கடைபஜ்ஜி இப்போது இனித்திடுமோ?
..
இருந்தாலும் பெட்டிக் கடைக்காரன் மூலையிலே
இருந்தொதுங்கி,நடுங்கிவந்த ஏழைகட்கே இவைதந்தான்!
..
தேங்கியநீர் ‘பேருந்தால்’ தெருக்கடைக்குள் புகுந்துவர,
தாங்கிவந்த் குடைகளெல்லாம் சாக்கடைநீர் குடித்(து)உருள,
..
‘அல்லோல கல்லோலம்’ சொல்அர்த்தம் அறிந்துகொண்டேன்!
மெல்லென வந்தஒரு மோட்டார்சைக் கிள்காரர்
..
முகமூடி அணிந்ததனால் கார்முட்டிக் கீழ்விழுந்தார்!
இகழ்ந்தஒரு வசையினால் இளம்பெண்சொல் இழந்ததுபோல்,
..
கார்களெல்லாம் வெள்ளத்தால் ‘தள்ளுமாடல் ஆகின!
சேர்ந்தஒரு சேறால் வெள்ளுடைகள் நிறம்மாற,
..
பள்ளிக் குழந்தைகள் பலமாக அழுதன!
எள்ளி நகைத்தனர் ஏராளம் போக்கிரிகள்!
..
நடைபாதைப் பழவண்டி!;;நனைந்துகொண்டே ஒருகாளை
குடைசாய்க்க, விழுந்தபழம் கொத்தாக அதன்வாய்க்குள்!!
..
டீக்கடை முதலாளி ‘தேதே’ என்(று)அதைவிரட்ட
போக்கற்ற அக்காளை ‘முட்டை’கொண்ட சைக்கிளைப்போய்
..
முகிலைஓர் மின்னலென முட்டிற்று! விழுந்தது!
நெகிழ்ந்தபல முட்டையெலாம் நெடுகத் தெருவழிய,
..
”டீக்கடையும் சைக்கிளுமே” மல்யுத்தம் நடுத்தெருவில்!
தாக்குப் பிடிக்காத சைக்கிள் காரர்(அ)ழ,
..
மிகஜோராய்க் காக்கைஎல்லாம்  மகிழ்ந்தே முட்டைகொத்த
வகையான ஜோக்என்று  வருவோர்கள் கைகொட்ட,
..
வெள்ளைக் கரு-வழுக்க விழுந்தார்கள் பலபேரே!
பிள்ளைகள் பாராமல் பிறழ்ந்தே உருண்டார்கள்!
..
எள்ளத் தனையும்இதை (இ)ரசிக்காத ஓர்ஏழை
அள்ளிமஞ்சள் கருவாலே தன்குவளை ரொப்பினனே!
..
கருணைகொண்ட ஓர்கிழவி துடைப்பத்தால் ’காட்சிகளை’
உருமாற்றத் துடைத்திலளேல்,.உங்களைப்போல்,பங்களாவின்
..
கண்ணாடிச் சுவர்வழியே ’களுக்’கென்றே சிரித்த’நல்ல’(?)
பெண்களைப்போல் நானு(ம்)இன்னும் சிரித்துப்பி ரமித்திருப்பேன்!!


No comments:

Post a Comment