Friday, July 1, 2011

குடைவானம் கூப்பிடுதூரம்?!!


குடைவானம் கூப்பிடுதூரம்?!!


என்ன(து)அது? குடைவானம் கிட்டே எட்டியதா?
சன்னமாம் பொய்யைச் சாதத்தில் கலந்துவைத்து
..
ஆலைத்- தொழிலாளிக்கு ’வர்ண’ அன்னம் அளிப்பதுபோல்
ஓலை விடுவீரோ? உடனேயான் யோசியேனோ?
..
கண்ணுக்கே  அதுமாயக் குடைகவிப்பு! உண்மையிலே
பெண்ணுக்குள் ரகசியங்கள் பீறிட்டுப் புதைந்ததுபோல்,
..
மண்ணுக்குள் வைரஒளி மயங்கித் திகைப்பதுபோல்
சுண்ணாம்பில்  ‘அக்னியும்’ சொகுசாய்த் தூங்குதல்போல்,
..
மகானின் அழுக்குடைக்குள் மாமாயச் சித்துகள்போல்
பகாசுர வயிறாய் இவ்வானம் பம்மாத்து!
..
விமானம் போகையிலே விழிதிறந்து பாருங்கள்!
அமானுஷ்ய மேகங்கள் அத்துணையும் திரண்டுறையும்!
..
அத்தனையும் ஒரேநேரம் மண்மேலே ஆசைவைத்தால்
முத்தனைய பெண்களுடன்.. மூழ்கிவிடும் அபாயம்தான்!
..
வானுக்கு மூடியில்லை! வயதில்லை! தூரமில்லை!
தேனுக்கு மரணமுண்டோ? வானுக்(கு)அ ளவுகோலோ?
..
வானுக்குள் எத்தனைதான் பொக்கிஷங்கள்? மாமாய
ஊனுக்குள் ஓர்’கிழவன்!’ உயர்ந்த-ரத்தம்  பொதிந்தாற்போல்,
..
விண்மீனை அகப்படுத்தி அதுசிரிப்பாய்ச் சிரிக்கிறது!
கண்ணை வியப்பாக்கிக் ’காலம்’-தூள் செய்கிறது!
..
சூரியனைக் கவியாக்கித் தொன்ம’வரம்’ தருகிறது!
பாரிலதை நிதநிதமும் பவனி வரச்செய்து,
..
பூமியில் இருபுறமும் புதுவிழிப்புத் தருகிறது!
சாமி! அவ்வானம் மேல்நாட்டில் குளிர்தந்தே,
..
ஊதுலையில் போட்டதுபோல் சென்னையிலே கலாய்க்கிறதே!
சாதுவா வானம்? சட்டென்று கைக்குள்வர?
..
மாமாயம், மகாமந்த்ரம், மாச்சித்து,மா-விரிப்பு,
மாமா பாய்வதுபோல் தூமகேதுச் சாத்தான்கள்,
..
எல்லாமே கொண்டுஅது எம்டன்போல் விளங்கிட,..நீர்
கல்லாரும் அறிந்தஅதைக் கைக்குள்தான் இருக்குதென்றீர்!
..
கவியாலே ககனம்போய்க் கனவு பலகண்டு
புவியிலே ’பொடிசு’ நாம் புதையலைப்போய்த் தொடுவதுவா?
..
கண்ணற்றோன் யானையுரு கண்டு விளக்குதல்போல்
புண்ணுற்றோன் முதலிரவில் பூபாளம் பாடுதல்போல்,
..
’புதுக்கவி’ஞன் மரபிலே காவியம்செய்க் கனவைப்போல்
மதுஉண்டோன் அருள்வாக்காய் மகான்போல் உளறுதல்போல்
..
நல்லகவி நானும் பஜனைபோல் நடித்திலனே!
தொல்லைதரும் இவ்வானம் மிகநிஜமாய் வெகுதூரம்!!
..
ரகசியத்தைப் பிளந்துணர ராட்சச னாநான்?
குகையிருட்டை மலைக்குள்போய்க் குடைந்துதர, பித்தனாநான்?
..
ஒன்றுமில்லை, நம்ரத்தம் முதலிலெங்கு ஊறுமென்றே
தின்றுகொழுத் தபலருக்குத் தெரியாத விந்தையைப்போல்
..
கூப்பிட்டு அதைஅழைக்கக் குடைவிரித்தும் நினையேனே!
சாப்பிட்டு  என்கருத்தைச் சரியாகச் சீரணிப்பீர்!
..
அறிவாலே ஒருபக்க வாதத்தை அரங்குவைத்தேன்!
திறமுடையோர் கவிகாள்நீர்! சண்டைசெய்யச் சேருவிரே!

No comments:

Post a Comment