Sunday, January 30, 2011

கவிதைக்கனல்


சூடு ஏறாத சொற்களால் கவிதை
..தொடுக்க எனக்குப் பிடிப்பதில்லை!
மாடுகள் கூட புல்இழுக் காமல்
..மந்தையில் சும்மா இருப்பதில்லை!

அப்போ திருந்த மக்கள் எல்லாம்
..அடிமைத் தனத்தால் குளிர்ந்திருந்தார்!
தப்பா வரிகளில் மாகவி பாரதி
..தணலை ஏற்றி உசுப்பிவிட்டார்!

பாரதி ஏற்றிய கவிதைக் கனலால்
..பாரத விடுதலை உறுதியாச்சு!
சாரதி உசுப்பிப் பெண்கள் எழுந்து
..சமத்துவ உரிமையும் கோரியாச்சு!

பாரதி தாசனின் புரட்சிச் சொற்களால்
..பாதி விதவையர்க்கு மணமாச்சு!
கூர்மைக் கனலில் சாதிப் பிரச்னை
..குனிந்தே வெந்து அமைதியாச்சு!

அன்றைய ஆட்சியர் கவிதைக் கனலுக்கு
..அரண்டு பணிந்த காலமது!
இன்றைய ஆட்சியரை எந்தச் சூட்டிலும்
..எருமை மாடாய் வைப்பதெது?

மானம் வெட்கம் இருந்தா லன்றோ
..மனிதன் சூட்டுக்கு பயந்திருப்பான்!
ஊனம் இல்லா ஆட்சி நடத்த
..ஒப்புக் கொண்டு நிமிர்ந்திருப்பான்!

அப்பரின் பாட்டால் சூலை நோயும்
..அப்படி யேஓடிப்போனதுவும்,
செப்புச் சுந்தரர் செப்பிய வரிகளால்
.. சிவனே நெருங்கி வந்ததுவும்,

பாட்டின் கனலுக்குப் பலத்த சாட்சி!-(எனில்?)-
..பழைய ‘டப்பா’ உதவிடுமா?
ஓட்டுப் பெட்டிகள் நிறைந்த பின்னாலே
..ஓட்டைக் கனலும் மதிப்புறுமா?-(ஆக)

கவிதைகள் படிக்க மனமே இல்லா,
 ...கற்றோர் இருக்கும் நாட்டினிலே
கவிதைக் கனலைப் பற்றிப் பேச
..கசப்புச் சுவைதான் நாவினிலே!

Monday, January 17, 2011

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?
மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்
..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!
ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை
..."ஆண்டால்",..மீசை வளர்வதுண்டு!
இங்க்லீஷ் எழுத்து "டபிள்யூ'போல்-ஐயா! 
..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?
பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!
.பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!"--
என்றே கேட்டால் சிரித்திடுவார்!-"கின்னஸ்"
..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!
இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,
..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்! 
பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர் 
..பத்து கலையும் அறிந்திடுவார்!
வீம்புக் கிதனைச் சொல்லவில்லை;-செய்யும்
..வேலை சொன்னால் மிகையுமில்லை!
ஈனும் பசுவுக் கருகிருப்பார்!-முதுகை
..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!
பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப் 
...பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!
காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்
...கரண்டி நெருப்பில் போடுகையில்,
வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்
..வட்டம் போடும் கலைதெரியும்!
ஜாதிச் சேவல் மடியில்வர,-கேப்பை.
....ஜலம்க லந்தே ஊட்டுகையில்
ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ 
..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!
விடலைப் பனையின் குருத்தெடுத்தே,-பாலர்க்கு
..விசிறி பண்ணித் தருகையிலோ
இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்
..ஈந்த 'சபரி" முகம்தெரியும்!
மீசை வளர்க்கும் கலையிலும்தான்,--லட்சிய
..வேட்கை அன்றோ தெரிகிறது! 
பூசை,'தெய்வம்' இவர்அறியார்!-உழைப்புப்
..."பொழுதே" கடவுள் என்றறிவார்!
கரணை கரணை யாய்க்கைகள்!- நல்ல
..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!
கருத்த உருவம், "காளி'யைப்போல்!-எனினும்
..கருணை வடிவம் அவர்இதயம்!

என் கணக்கு வாத்தியார்

என் கணக்கு வாத்தியார்


கணக்கிலே சுமார்யான்! என்றால்,
..கணக்கிலே கசப்புச் சேர்த்த
பிணக்குவாத் யாராய் ராமன்
...பிரம்படி கொண்டே தாக்கின்
கணக்குப்போ டுவனா?அன்னார்
..கண்கண்டால் ஓடினேன் காதம்.
மணக்கிற மல்லி கையில்-
...மலத்தினைச் சேர்த்தார் அய்யா!


..(வேறு-)-


உருட்டு விழிகள்! வட்டில்
..ஒப்பத் தலையில் பாகை!
சுருட்டு வீச்சம்! வாயில்!
..சுத்த ஆங்கி லத்தில்
வெருட்டும் திட்டு! மீசை
..வேறு! அய்ய னாரோ
இருட்டு வண்ண வாத்யார்?
..இவரின் பேரா ராமன்?


என்றே சிமிட்டும் கண்ணோ(டு)
..எவரும் நகைத்தார் அன்று!--
என்ன வாத்யார் அன்னார்
..என்றே பசங்கள் திட்ட,
தின்னும் பண்டம் போன்ற
..தேன்கணக் கிற்கும் அஞ்சி
மின்னும் பிரம்பின் வீச்சை
..மிகவே வாங்கி நொந்தார்!


குரலில் இடியின் ஓசை!
...குண்டு உடம்பால் தூக்கம்!
பொருட்டாய் மதியார் எம்மை!
..பொறுமை சற்றும் இல்லை!
அருமை கணக்(கு)என் னாமல்
..அதட்டும் உறுமல் சிங்கம் !
இறந்தார் மார்அ டைப்பால்!
..எனக்கோ நூறு மார்க்கே!