Wednesday, May 30, 2012

ஊதுபத்தி

ஊதுபத்தி

தமிழர்கள் நகைச்சுவையாய்ப் பேரை வைத்துத்
...தம்போக்கில் சிரிக்கவைப்பர்!;.ஒல்லி ஊசி
அமைதியாய் உதவுகையில் ‘குண்டு’ -ஊசி
..எனஅழைத்தே அதைப்போய்க்கிண் டலடிப் பார்கள்!
மமதையில்லா மாமியைப்போய் ‘ஊதிவிட் டாயே
..மாலு!’என்றே நகைப்பதுபோல் குச்சி என்னைச்
செமையாகச் சீவியபின் என்மேல் தூளைத்
..தீண்டிவிட்டு,..’ஊது-பத்தி’என்ன லாமா?


அழுதழுது புகையாகக்  ‘கரை’யும் என்னை
...அநியாயம்!  ‘ஊதிய’ஓர் பத்தி என்றால்?
அழுகின்றேன்;-உமைச்சுற்றி மணக்க வைக்க
..அபலைநான் கிடைத்தேனோ? உடம்பே போச்சே!
பழுதுபட்டேன் என்றாலும் கடவுள் முன்பு
..பற்றவைத்தீர்! போகட்டும்! உம்உ டம்பின்
அழுக்குமணம் சன்னதியில் சேரா வண்ணம்
...அழகுறவே நான்மறைப்பேன்! தியாகி யானே!


நாத்திகனோ  ‘சிகரெட்டை’அருகில் ஊதி
..நானு(ம்)உன்போல் புகைவிட்டேன்! எனம கிழ்வான்!
சாத்திரம்போல்  ‘நான்நீயும்’ ஒன்றே என்பான்;
..சன்னதிக்கே வந்துபுகை விடுவேன் என்பான்!
ஆத்திரமே படுகின்றேன்; திருத்து வார்-யார்?
..அதோ!ரயிலும் புகைவிடுமே..!எல்லாம் ஒன்றா?
ஆத்திகனாய் மாறியபின்  ‘அகம்’க ரைந்தே
..ஆண்டவன்முன் ‘அழுது’ஒன்றும் தத்துவம் யான்!


இந்தஉண்மை தனைப்புகையாய் ஊதிச் சொல்லும்
..எளியவன்யான் என்றுணர்ந்தே பக்தர் எல்லாம்
வந்தித்தே ‘ஊதுபத்தி’ எனப்பேர் தந்தார்!--
..வக்கணையாய் எனைஏற்றி கடவுள் முன்னர்
பந்தமுடன் சுற்றிடுவார்! பக்தி கொண்டே
..பாடிடுவார்! நெடுநேரம் மணந்து நிற்பேன்!
சொந்தமென எனைப்புகழும் தமிழர் நீங்கள்
..தூயஇந்தத் தத்துவம்-பின் பற்று வீரே!!

No comments:

Post a Comment