Friday, April 24, 2015

சிரிப்புக் குரங்குகள்!

நண்பன் அழைத்திட நாவலூர் சென்றேன்!
.. நடுவழி! மக்கள்  ‘தர்ணா’;   இறங்கினேன்;
மண்டை   கிழிய  பெண்களின் கோஷம்!
.. "மனத்தை வாட்டிடும்  குரங்கை ஒழித்திடு!”
*
பாதையின்  குறுக்கே  படுத்தும்  அவர்கள்!
.. பதமாய்க்  காவலர் சொல்லியும்  கேட்கலை!
“வேதனை  ஐயா   குரங்குகள் தொல்லை!
.. விடிவு  தெரியாமல்  நகர்வது   இல்லை!..”-
*
குரங்கை  ஒழிக்கப்  பாதையை  மறிக்கும்
.. கூட்டம்   கண்டே  சிரிப்புவந்  தாலும்
“குரங்குகள்  கூட்டமாய்  வீட்டினுள்  வந்தே
.. குழந்தைகை  கடித்துப்  பண்டம்  பிடுங்குதே!
*
மதியம்  தூங்கிடில்  அடுக்களை  காலி!
.. மாலையும் காலையும் விரட்டலே ஜோலி!
பதைத்துக்  ‘கலெக்டர்’  உடன்செயல்  படணும்!
.. பாவியா  நாங்கள்-ஏன் அவஸ்தைப்  படணும்?
*
முனியனும்  கனியனும்   மந்தியூர்க் காரர்கள்!
.. முன்னால்  வந்தே   கலெக்டர்முன்  நின்றனர்!
இனிமையாய்ப்   பேசி.. “ஆயிரம்’ கேட்டனர்!
.. எல்லாக்  குரங்கையும் பிடிப்பதாய்ச்  சொல்லினர்!
*
ஒவ்வொரு  குரங்கும்   சாக்குப்  பையில்!
.. ஓட்டியே  சென்றனர்  கூண்டு லாரியில்!
செவ்வையாய்க்   கூடவே   இருவரும்  சென்றனர்!
.. சிரித்த   ட்ரைவருடன்  எங்கேயோ  விட்டனர்!
*
அடுத்த  வருடமே   ‘கீவளூர்’  பாதையில்
.. அட்ட  காசமாய்  மக்களின் மறியல்!
படுத்தின  அதேஅதே  குரங்குகள்  கூட்டம்!
.. பாவி   ‘முனியனுக்கு’ப்  பணத்திலே  நாட்டம்!

No comments:

Post a Comment